ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதற்கான காரணத்தை டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் ட்விட்டரிலேயே தெரிவித்துள்ளார்.
டெஸ்லா அமைப்பின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் கடந்த ஏப்ரல் மாத பங்கு விலை நிலவரப்படி 44 பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய நிலவரப்படி மூன்றரை லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் டிவிட்டரை வாங்குவதற்கு அந்த ஊடக நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் குழு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அவை ஒப்பந்தமானது. அதற்கு முன்னதாக டிவிட்டரில் 9 சதவீத பங்குகளை வாங்கியிருந்த எலான் மஸ்க், அந்நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாராராக இருந்தார். இந்நிலையில், திடீரென டிவிட்டர் நிறுவனத்தை வாங்க மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக எலான் மஸ்க் கடந்த ஜூலை 10-ம் தேதி அறிவித்தார்.
பின்னர், டிவிட்டர் நிறுவனம் போலி கணக்குகள் குறித்த விவரங்களை அளிக்க மறுப்பதால் மேற்கொண்டு ஒப்பந்தத்தை இறுதி செய்ய முடியாது என்று எலான் மஸ்க் கூறினார். இதனை எதிர்த்து டிவிட்டர் நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது. ஒப்பந்தத்தை தட்டிக்கழிக்க இது போன்ற காரணங்களை எலான் மஸ்க் கூறுவதாக குற்றம்சாட்டியது.
இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம், அக்டோபர் 28-க்குள் (இன்று) ஒப்பந்தத்தை இறுதி செய்ய கெடு விதித்தது. எலான் மஸ்க் வெள்ளிக்கிழமை மாலைக்குள் டுவிட்டர் ஒப்பந்தத்தை 44 மில்லியன் டாலர் உடன்படிக்கையில் முடித்துவிட வேண்டும் அல்லது சட்டரீதியான வழக்கை சந்திக்க நேரிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், எலான் மஸ்க் சான்பிரான்சிஸ்கோவில் அமைந்துள்ள டிவிட்டரின் தலைமையகத்திற்கு நேற்று சென்றார். அவர் தனது கையில் கை கழுவ பயன்படுத்தப்படும் தொட்டி(சிங்க்) ஒன்றை சுமந்து சென்று ஆச்சரியப்படுத்தினார்.
இந்நிலையில், இன்று நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், ஒப்பந்தம் முடிந்து எலான் மஸ்க் டிவிட்டரின் உரிமையாளரானார் என்று தெரிவித்துள்ளது.
இதனையடுத்து ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதற்கான காரணத்தை எலான் மஸ்க் ட்விட்டரிலேயே தெரிவித்துள்ளார். “நான் ட்விட்டரை வாங்கியதற்கான காரணம், நாகரீகத்தின் எதிர்காலத்திற்காக ஒரு பொதுவான டிஜிட்டல் ஊடகத்தை வைத்திருப்பது மிகவும் அவசியமானது. அங்கு பலவிதமான நம்பிக்கைகளை, ஆரோக்கியமான முறையில், வன்முறையை நாடாமல் விவாதிக்க முடியும். தற்போது சமூக ஊடகங்கள், தனித்தனி அறைகளாக பிரிந்து, நமது சமூகத்தில் அதிக வெறுப்பை உருவாக்கி பிளவுபடுத்தும் வகையில் உள்ளது.
உண்மைக்குப் புறம்பான தகவல்கள், ஆதாரமற்ற அவதூறுகள் முதலியவற்றை சமூகத்தில் பரவுவதை தடுக்கவே நான் ட்விட்டரை வாங்கினேன். என்னால் வாங்க முடியும் என்பதற்காகவோ, அதிக பணம் சம்பாதிப்பதற்காகவோ நான் அதைச் செய்யவில்லை. நான் நேசிக்கும் மனிதகுலத்திற்கு உதவுவதற்காக இதைச் செய்தேன்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.








