குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இன்று இரவு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
நாட்டின் இரண்டாவது பெரிய அரசியல் சாசன பதவியாக குடியரசு துணை தலைவர் பதவி கருதப்படுகிறது. குடியரசு துணை தலைவரே மாநிலங்களவையின் தலைவராகவும் செயல்படுவார். தற்போது குடியரசு தலைவராக உள்ள வெங்கைய்யா நாயுடுவின் பதவிக்காலம் வரும் 10ந்தேதியுடன் நிறைவடைகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து புதிய குடியரசு துணை தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் ஜெகதீப் தன்கர் களம் இறங்கினார். எதிர்க்கட்சிகள் சார்பில் குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களின் முன்னாள் ஆளுநர் மார்க்கரெட் ஆல்வா களம் இறங்கியுள்ளார்.
குடியரசு துணை தலைவர் தேர்தலில் மக்களவை உறுப்பினர்கள் 543 பேர் மாநிலங்களவை உறுப்பினர்கள் 245 பேர் என மொத்தம் 788 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த தேர்தலில் யாருக்கும் வாக்களிக்கப்போவதில்லை என மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்திருந்தது. எனவே இரு அவைகளிலும் உள்ள அக்கட்சியின் 36 எம்.பிக்கள் மற்றும் மாநிலங்களவையில் காலியாக உள்ள 8 இடங்கள் தவிர்த்து மொத்தம் 744 எம்.பிக்கள் இன்று வாக்களிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியதிலிருந்து மக்களவை மற்றும் மாநிலங்களவையின் எம்.பிக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வந்தனர். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, அக்கட்சியின் எம்.பி ராகுல்காந்தி உள்ளிட்ட எம்.பிக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர். மாலை 5மணிக்கு வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ள நிலையில் 725 எம்.பிக்கள் இந்த தேர்தலில் வாக்களித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திரிணாமுல் காங்கிரஸ் இந்த தேர்தலில் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்திருந்தாலும் அக்கட்சி எம்.பிக்களான சிசிர் அதிகாரியும், திப்யேந்து அதிகாரியும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களித்துள்ளதாகக் கூறப்படுகிறது. பாஜக எம்.பியான நடிகர் சன்னி தியோல், அக்கட்சியின் மற்றொரு எம்.பி சஞ்சய் தோத்ரே ஆகியோர் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இன்று இரவே வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.