உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்துவிட்டு, தேவையில்லாமல் வேண்டுமென்றே மாவட்ட நிர்வாகம் நாடகமாடுவதாக மாற்று தரப்பு பெண்கள் காவல்துறை மற்றும் வருவாய் கோட்டாட்சியகரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் தமிழக அரசின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. மூன்று சமூக மக்களிடம் இருந்து அரிசி, வெல்லம் ஆகியவற்றை பெற்று அதிகாரிகள் முன்னிலையில் சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டது. இந்த விழாவில் அரசு சார்பில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்ய நாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகளை கலந்த விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பிய மாற்று தரப்பு பெண்கள், உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்தும் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் அவர்களை கைது செய்யாமல் உள்ளது என்றும், குற்றவாளிகளைகண்டுபிடிக்காமல் சமத்துவ பொங்கல் எதற்காக கொண்டாட வேண்டும், இதனை நாங்கள் புறக்கணிக்கிறோம் என்றும் கூறி 50க்கும் மேற்பட்ட பெண்கள் திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி மற்றும் காவல்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும், அப்பெண்கள் அதனை ஏற்க மறுத்ததோடு, எங்களுடைய குறைகளை அமைச்சர்களிடம் கூற வேண்டும் என்று போராட்டத்தில் குதித்தனர். அப்போது காவல்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஒருதலைப் பட்சமாக செயல்படுவதால் எங்களுடைய ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆகியவற்றை நீங்களே பெற்றுக் கொள்ளுங்கள், எங்களுக்கு எந்த விதமான அரசு சலுகைகளும் வேண்டாம் என்று கோஷமிட்டு தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது பதட்டம் நிலவியது.
இதனை கேள்விப்பட்ட அமைச்சர்கள் மூன்று பேரும் அப்பெண்களை சந்திக்காமல், மாற்றுப் பாதை வழியாக வேங்கைவயல் கிராமத்தில் இருந்து, புதுக்கோட்டைக்கு புறப்பட்டுச் சென்றனர்.









