வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பான சிபிசிஐடி விசாரணையை கண்காணிக்க, ஓய்வு பெற்ற நீதிபதியை ஏன் நியமிக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி, ராஜ்கமல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி புலன் விசாரணை அதிகாரியின் அறிக்கையை தாக்கல் செய்தார். மேலும், வழக்கு தொடர்பாக 147 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணையில் முன்னுக்கு பின் முரணான தகவல்கள் தெரியவந்துள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதியை ஏன் நியமிக்கக்கூடாது என்ற கேள்வியை எழுப்பினர். இதனையடுத்து வழக்கை நீதிபதிகள் தள்ளிவைப்பதாக அறிவித்தனர்.
- பி.ஜேம்ஸ் லிசா








