வெம்பக்கோட்டை அகழாய்வு: சுடுமண்ணால் ஆன காளை உருவ பொம்மை உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுப்பு!

விருதுநகர் வெம்பக்கோட்டையில் நடைபெறும் அகழாய்வில் சுடுமண்ணால் ஆன காளை உருவ பொம்மை, காதணி, அலங்கரிக்கப்பட்ட மணி உள்ளிட்ட தொன்மையான பொருட்கள் உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதியில் கடந்த 5 ஆயிரம்…

விருதுநகர் வெம்பக்கோட்டையில் நடைபெறும் அகழாய்வில் சுடுமண்ணால் ஆன காளை உருவ பொம்மை, காதணி, அலங்கரிக்கப்பட்ட மணி உள்ளிட்ட தொன்மையான பொருட்கள் உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதியில் கடந்த 5 ஆயிரம் ஆண்டுகள் நுண் கற்காலத்தை அறியும் வகையில், வைப்பாற்றின் வடகரையில் 3ம் கட்ட அகழாய்வு பணி கடந்த 18-ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக கண்ணாடி மணிகள், கல்மணிகள் மற்றும் பழங்கால சிகை அலங்காரத்துடன் பெண்ணின் தலைப்பகுதி, கிபி 16ம் நூற்றாண்டு நாயக்கர் கால செப்பு காசு, அணிகலன்கள், சங்கு வளையல்கள்  உள்ளிட்டவை கண்டறியப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று (ஜூலை 6) உடைந்த நிலையில் சுடுமண்ணால் செய்யப்பட்ட காளை உருவ பொம்மை, சுடுமண் காதணி, அலங்கரிக்கப்பட்ட சுடுமண் மணி ஆகிய தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.  ஏற்கனவே நடைபெற்ற 2 கட்ட அகழாய்வில் 10க்கும் மேற்பட்ட திமிலுடன் கூடிய காளை உருவ பொம்மை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தற்போது மேலும் ஒரு காளை உருவ பொம்மை கிடைக்கப்பெற்றுள்ளதன் மூலம் இங்கு வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை தொன்மையான மனிதர்கள் கொண்டாடியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை இணை இயக்குநர் பொன் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.