வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக ஐம்பொன் சிலைகளை கடத்தி செல்ல முயன்ற திருடர்களை போலீசார் பல கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்று பிடித்தனர்.
வேலூர் மலைகோடி பகுதியில் அரியூர் காவல் நிலைய ஆய்வாளர் ரேகா தலைமையிலான போலீசார் நேற்று வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு அவ்வழியாக சிலர் ரகசியமாக ஐம்பொன் சிலைகளை கடத்தி வருவதாக தகவல் கிடைத்தது.இதையடுத்து அவ்வழியாக வந்த வாகனங்களை தீவிரமாக சோதனை செய்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் பள்ளிகொண்டா பகுதியில் இரு சக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.அதற்கு அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை பிடிக்க முயன்ற போது அங்கிருந்து அவர்கள் தப்பிச்சென்றனர்.ஆனால் விடாமல் அவர்களை துரத்திய போலீசார் சாத்துமரை அருகே வைத்து மடக்கி பிடித்தனர்.
அவர்கள் வைத்திருந்த கட்டைப்பையை சோதனை செய்த போது அதிலிருந்து கருவேப்பிலைகளுக்கு இடையில் சுமார் ஒன்றரை அடி உயரமும், ஐந்தரை கிலோ எடையும் உடைய சிவகாமி அம்மையாரின் ஐம்பொன் சிலை பறிமுதல் செய்யப்பட்டது.சிலையை கடத்தி வந்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வின்சென்ட் ராஜ்(43), கண்ணன் (42) ஆகிய இருவரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு இருசக்கர வாகனம் மற்றும் மூன்று செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு பின்னர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.அவர்களிடமிருந்து ஐம்பொன் சிலை பறிமுதல் செய்யபட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இந்த சிலை கடத்தலில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா? என்றும், சிலை எங்கிருந்து கடத்திவரப்பட்டது என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-வேந்தன்







