பரபரப்பான அரசியல் சூழலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் #VCK தலைவர் திருமாவளவன் சந்திப்பு!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, வி.சி.க. தலைவர் திருமாவளவன் சந்தித்தார்.  திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக…

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, வி.சி.க. தலைவர் திருமாவளவன் சந்தித்தார். 

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக மது ஒழிப்பு மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ள விசிக, அந்த மாநாட்டுக்கு அதிமுகவுக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு மூலம் அழைப்பு விடுத்தது.

அதேசமயம் பாமக, பாஜக ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அதிமுகவுக்கு அழைப்பு விடுத்தது, ஆளும் திமுக அரசுக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் மாநாடு நடத்துவது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் நடவடிக்கை கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக விமர்சிக்கப்பட்டது.

இது தொடர்பான பரபரப்பு அடங்குவதற்குள் கடந்த சனிக் கிழமை திருமாவளவனின் சமூக வலைதளப் பக்கத்தில் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைக்கப்பட வேண்டும், சீட்டு ஒதுக்கீடு செய்யாமல் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அவர் பேசிய வீடியோ வெளியிடப்பட்டது. சிறிது நேரத்தில் நீக்கப்பட்ட அந்த வீடியோ மீண்டும் சர்ச்சையை கிளப்பியது.

இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், திமுகவுக்கும் கருத்து வேறுபாடு நிலவுவதாக விமர்சனங்கள் எழுந்தன. அந்த வீடியோவை தனது அட்மின் போட்டு நீக்கியிருப்பார் என்று திருமாவளவன் விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், வி.சி.க. சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடைபெறுவதை ஒட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திருமாவளவன் இன்று சந்தித்தார். மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க கடந்த சில நாட்களுக்கு முன்பு அனைத்துக் கட்சியினருக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திருமாவளவன் அழைப்பு விடுத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.