வழியிலே காலை நீட்டி வம்பிழுக்கும் செயலாக ஆளுநரின் செயல் தெரிகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், விசிக சட்டமன்ற உறுப்பினர்களுடன் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் பேசியதாவது: விசிக சார்பில் முதலமைச்சரை சந்தித்து ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல் நல் வாழ்த்துகளை தெரிவித்தேன்.
சட்டமன்றத்தில் மக்கள் விரோத நடவடிக்கையை கண்டித்து உடனடி எதிர்வினையாற்றிய முதலமைச்சரின் நடவடிக்கை போற்றுதலுக்குரியது. ஆளுநர் உணர்ச்சிவசப்பட்டு செய்யவில்லை, அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தவே செய்துள்ளார். சங்பரிவார்களின் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட செயல்திட்டங்களில் ஒன்று.
நாகலாந்தின் கவர்னராக இருந்தவர் ஆர்.என்.ரவி. அவை மரபுகள் என்னவென்று அவருக்கு தெரியும். முன் அனுபவம் உள்ளவர் இவ்வாறு செய்வது, உள்நோக்கத்துடன் திட்டமிட்ட ஒன்று. அதனை அனுமதிக்க முடியாது.
முதலமைச்சருக்கு ஒத்துழைக்கும் வகையில் ஆளுநர் மாளிகை நோக்கி வரும் 13 ஆம் தேதி முற்றுகை போராட்டம் செய்ய முடிவெடுத்துள்ளோம். வழியிலே காலை நீட்டி வம்பிழுக்கும் செயலாக ஆளுநரின் செயல் தெரிகிறது. அரசின் இலச்சினை, தமிழ்நாட்டை புறக்கணிக்கிறார் என்றால் ஆளுநராக இருக்க தகுதியற்றவராகிறார் என்று திருமாவளவன் தெரிவித்தார்.







