தமிழ்த் திரையுலகில் தல, தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர்கள் அஜித், விஜய். இவர்களின் துணிவு, வாரிசு படங்கள் வரும் 11ம் தேதி வெளியாகின்றன. 2014ம் ஆண்டுக்கு பிறகு இருவரும் நடித்துள்ள திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளன. இது குறித்து இன்றைய சொல் தெரிந்து சொல் பகுதியில் பார்க்கலாம்…
விஜய், அஜித் நடித்துள்ள திரைப்படங்கள் இதற்கு முன்பு, குறிப்பாக 1996ம் ஆண்டு முதல் 10க்கும் மேற்பட்ட படங்கள் ஒரே நாளில் வெளியாகியுள்ளன. சில படங்கள் ஓரிரு நாட்கள் இடைவெளியிலும் வந்துள்ளன. கடந்த 20 ஆண்டுகளில், 2002 ஆம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி வெங்கடேஷ் இயக்கிய விஜய் நடித்த பகவதி, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி அஜித் நடித்த வில்லன் ஆகிய படங்கள் தேதி வெளியாகின. அடுத்த ஆண்டு அக்டோபர் 23ம் தேதி விஜயின் திருமலை, அஜித்தின் ஆஞ்சநேயா ஆகிய இருபடங்களும் ஒரே நேரத்தில் வெளியாகின. அப்போது ஆஞ்சநேயாவை திருமலை முந்தியதாக விஜய் ரசிகர்களால்
சொல்லப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
2006ம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜனவரி 14ம் தேதி அஜித்தின் பரமசிவன், விஜயின் ஆதியும் வெளியாகின. வழக்கம் போல் ரசிகர்கள் கொண்டாடினாலும், ஆதி போதிய வரவேற்பை பெறவில்லை. ஆனால், பரமசிவன் ஒப்பீட்டளவில் கொஞ்சம் தேவலாம் என்கிற விமர்சனத்தைப பெற்றதாக சொல்லப்படுகிறது.
2007ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி பிரபுதேவா இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் போக்கிரியும் அஜித் நடிப்பில் ஆழ்வார் படமும் வெளியாகின. தெலுங்கு ரீமேக்கான போக்கிரி படம் ஹிட் அடித்தது. ஆனால், ஒப்பீட்டளவில் ஆழ்வார் அவரது ரசிகர்களால் மட்டுமே பெரிதாக வரவேற்கப்பட்டது. ஆனால், விஜய் ரசிகர்கள் போக்கிரிப் பொங்கலைக் உற்சாகமாகக் கொண்டாடினர்.
2014ம் ஆண்டும் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி விஜய், மலையாள உச்சநட்சத்திரம் மோகன்லால் நடித்த ஜில்லா, சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த வீரம் ஆகிய படங்கள் வெளியாகின. இருதரப்பு ரசிகர்களையும் மகிழ்விக்கும் வகையில்
இரண்டு படங்களுமே ஹிட் அடித்து, விருந்து வைத்தன என்கிறார்கள் ரசிகர்கள்.
இந்நிலையில், 2014ம் ஆண்டிற்கு பிறகு, விஜய், அஜித் நடித்துள்ள திரைப்படங்கள் பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஜனவரி 11 ஆம் தேதி வெளியாகின்றன. துணிவு, வாரிசு இரண்டு படங்களுக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. தயாரிப்பு தொடங்கி, பாடல் வெளியீடு, ட்ரைலர் வெளியீடு, முன்பதிவு என ஒவ்வொன்றும் கவனம் பெற்று வருகின்றன. ரசிகர்களால், சமூக வலைதளங்களில் பேசு பொருளாகவும் ஆகியுள்ளன.
ரசிகர் கூட்டம் நிறைந்த இருவரின் படங்களும் தனித்தனியாக வந்தாலே தியேட்டர்கள் திருவிழாக்கோலம் காணும். இரண்டு படங்களும் ஒரேநாளில் வெளியானால் கேட்கவே வேண்டாம். இதனால், திரையரங்கு உரிமையாளர்கள் கொஞ்சம் கலக்கத்தில்தான் உள்ளனர். ஆர்வமிகுதியால் ரசிகர்கள் சிலர் திரையரங்கில் செய்த ரகளைகள்தான் காரணம். இதற்கு கடந்த கால உதாரணங்களும் இருக்கின்றன என்கிறார்கள்.
துணிவு ட்ரைலர் வெளியாகி 24 மணி நேரத்தில் 3 கோடி பார்வையாளர்களைக் கடந்தது. வாரிசு ட்ரைலர் தமிழ் மற்றும் தெலுங்கில் 3 கோடியே 20 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இது அவர்களின் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை கொடுத்துள்ளது. இந்த உற்சாகமும் விறு விறுப்பும் படத்திலும் இருக்க வேண்டும் என்பதே பொதுவான ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இருக்குமா…?