முக்கியச் செய்திகள் இந்தியா

2006 வாரணாசி தொடர் குண்டு வெடிப்பு வழக்கு: பயங்கரவாதிக்கு மரண தண்டனை

கடந்த 2006-ம் ஆண்டு மார்ச் 7-ந் தேதி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் 2 குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இதுதொடர்பாக வழக்கில் பயங்கரவாதிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

வாரணாசியில் உள்ள சங்கத் மோச்சான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. அப்போது, அங்கு பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதையடுத்து, சிறிது நேரத்தில் வாரணாசி கன்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் முதல் வகுப்பு பயணிகள் ஓய்வறைக்கு வெளியே சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. ரயிலுக்காக காத்துக்கொண்டிருந்த பயணிகள் பீதியடைந்து அங்கும், இங்கும் ஓடினர். 28 பேர் பலி மேற்கண்ட 2 இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளில் 28 பேர் பலியானார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 இந்த தொடர் குண்டுவெடிப்புகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு தீவிர விசாரணை நடத்தி, வலியுல்லா கான் என்ற பயங்கரவாதியை கைது செய்தது. அவர் உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவர் வங்காளதேசத்தை சேர்ந்த ஹர்கத் உல் ஜிகாத் அல் இஸ்லாமி என்ற பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. அவர் மீது மொத்தம் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

16 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கு விசாரணை சமீபத்தில் முடிவடைந்தது. கடந்த 4-ம் தேதி காஜியாபாத் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2 வழக்குகளில், பயங்கரவாதி வலியுல்லா கான் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அந்த வழக்குகளில் அவர் குற்றவாளி என்று அறிவித்தது.

தண்டனை விவரங்கள் 6-ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி கூறினார். அதன்படி, வலியுல்லா கானுக்கு ஒரு வழக்கில் மரண தண்டனையும், மற்றொரு வழக்கில் ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி ஜிதேந்திர குமார் சின்கா உத்தரவிட்டார்.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram