திருவாரூரில் பிறந்து சிங்கப்பூரில் குடியுரிமை பெற்ற காவல் அதிகாரி ஒருவர் இரண்டு பெண்களை திருமணம் செய்து வரதட்சணை பெற்று கொண்டு அவர்களை கழட்டி விட்டதோடு, 3-வது திருமணத்திற்கு தயாராகி கொண்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியைச் சேர்ந்த அப்துல்காதர் மகன் முகமது
ரபிக். சிங்கப்பூரில் குடியுரிமை பெற்ற இவர் அங்கு காவல் அதிகாரியாக பணியாற்றி
வருகிறார். இவருக்கும் அத்திக்கடையைச் சேர்ந்த தஸ்லீமா என்பவருக்கும் கடந்த 2014
ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ரூ.2.50 கோடி செலவு செய்து திருமணம்
செய்துள்ளனர். ஆனால் திருமணம் நடைபெற்ற ஒரே மாதத்தில் மனைவிக்கு மனநலம்
சரியில்லை, நடத்தை சரியில்லை எனக் கூறி முகமது ரபீக் மனைவியை இந்தியாவிற்கு திருப்பி அனுப்பியுள்ளார். மேலும் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதோடு, வரதட்சணையாக பெற்ற எதையும் திருப்பி கொடுக்கவில்லை.
இதனால் பெண்ணின் பெற்றோர் சிங்கப்பூர் போலீசில் புகார் செய்தனர். மேலும் திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். விசாரணையை பெற்று கொண்ட போலீசார், குற்றம்சாட்டப்பட்ட காவல் அதிகாரி சிங்கப்பூரில் இருக்கிறார் என்றும், அவர் இந்தியா வரும்போது விசாரிக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், முகமது ரபீக் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அமர்நிஸா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இந்த திருமணத்தின் போது ரூ.1 கோடிக்கும் மேல் பெண்ணின் பெற்றோர் செலவு செய்துள்ளனர். முதல் மனைவிக்கு நேர்ந்தது போலவே, அமர் நிஸாவிற்கும் நேர்ந்துள்ளது. திருமணமான ஒரு மாதத்தில் அவர் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டார். இதையடுத்து அமர்நிஸா பெற்றோர் சிங்கப்பூர் காவல்துறையினரிடம் புகார் அளித்தும், அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
திருமணம் செய்து பெண்களை ஏமாற்றுவதை வாடிக்கையாக வைத்திருக்கும் முகமது ரபீக் அடுத்து திருமணத்திற்கான முயற்சியை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த முதல் மனைவி தஸ்லீமா மற்றும் 2-வது மனைவி அமர் நிஸா ஆகியோரின் பெற்றோர் ஒன்றாக இணைந்து திருவாரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் மேலும் ஒரு புகார் மனு அளித்தனர். இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் மனு கொடுத்தனர். தங்கள் மகள்களுக்கு நிகழ்ந்தது போன்ற சம்பவம் வேறு எந்த பெண்ணுக்கும் நடந்த விட கூடாது என்பதற்காக மனு அளித்துள்ளோம் என தெரிவித்த அவர்கள், இந்திய அரசும், தமிழ்நாடு அரசும், சம்மந்தப்பட்ட முகமது ரபீக் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
மாநாடு படத்தில் ஒரே சம்பவம் திரும்ப திரும்ப வருவது போன்று, முகமது ரபீக் வாழ்க்கையில் திருமணம் முடிப்பது, வரதட்சணை வாங்குவது மற்றும் மனைவியை கழட்டி விடுவது என சாமர்த்தியமாக ரிபீட் செய்து வருகிறார் என நெட்டிசன்கள் விமர்ச்சித்துள்ளனர்.
– இரா.நம்பிராஜன்







