நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கும் அணியாக ராஜஸ்தான் உள்ளது. கடந்த 10 ஆம் தேதி நடைபெற்ற பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின் நடுவே ராஜஸ்தான் அணி மேலாளர் ரோமி பிந்தர், அணியின் டக்-அவுட்டில் அமர்ந்தவாறு தனது மொபைல் போனை பயன்படுத்தி கொண்டிருந்தார். பெரும் சர்ச்சையை கிளப்பிய இந்த விவகாரத்தில் அவருக்கு ரூ 1 லட்சம் அபராதம் விதித்து பிசிசிஐ நடவடிக்கை எடுத்தது.
தற்போது ராஜஸ்தான் அணி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் பஞ்சாப் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வீழ்த்தி அபார வெற்றியை பெற்றது.
போட்டியின் நடுவே, ராஜஸ்தான் அணி கேப்டன் ரியான் பராக் டிரெஸ்ஸிங் ரூமில் ‘வேப்பிங்’ (Vaping) செய்ததாகக் கூறப்படும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வேகமாக பரவியது. இது பெரும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. வேப்பிங் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் ரியான் பராக்கின் செயலுக்கு கடும் விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.
பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கண்டனங்கள் வசந்த நிலையில் ரியான் பராக் மீது பிசிசிஐ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் படி அவருக்கு போட்டி கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக அவருக்கு ஒரு தகுதிக்குறைப்புப் புள்ளியும் வழங்கப்பட்டது.







