வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் சட்ட மசோதா நிறைவேறியது.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவிகித தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென பாமக கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்தது. அரசின் பேச்சுவார்த்தையை அடுத்து, 20 சதவிகித இட ஒதுக்கீடு கொள்கையை தளர்த்திக்கொள்வதாக அறிவித்த பாமக நிறுவனர் ராமதாஸ், ஆனால் தற்போது வழங்கப்படும் இடஒதுக்கீட்டில் பெரும்பகுதி உள் ஒதுக்கீடாக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
இந்த நிலையில் தனியார் கல்வி நிறுவனங்களிலும், அரசுப் பணிகளிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினருக்கு தனி ஒதுக்கீடு வழங்கும் சட்ட முன் வடிவு சட்டப் பேரவையில் இன்று பிற்பகல் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது. அதன்படி, 20 சதவிகித இட ஒதுக்கீடு 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பெரும்பகுதியாக வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் ஒதுக்கீடும், சீர் மரபினருக்கு 7 சதவிகிதமும், மீதமுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 2.5 சதவிகிதமும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
இதன்பின்னர் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு தற்காலிகமானதே என்றும், 6 மாதங்களுக்குப் பின் மாற்றி அமைக்கப்படும் என்ற தகவலையும் தெரிவித்துள்ளார்.
உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சென்னை தி.நகரில் உள்ள பாமக அலுவலகத்தில் பட்டாசுகள் வெடித்து பாமகவினர் கொண்டாடினர். இட ஒதுக்கீட்டை வென்று விட்டோம். வாழ்க வாழ்க என்ற முழக்கங்களையும் அவர்கள் எழுப்பினர்.







