முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஒன்றுபட்ட அதிமுக என்ற கோஷத்தை முன்வைத்து அரசியல் நடத்தி வருகிறார். ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியிலோ, கூட்டணியிலோ சேர்த்துக்கொள்ள மாட்டோம் என்று எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்தார்.
இதனிடையே அவரது அணியில் இருந்த மனோஜ் பாண்டியன் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து சமீபத்தில் திமுகவில் இணைந்தார். அதேபோல், ஜே.சி.டி. பிரபாகர் தவெகவில் ஐக்கியமானார். தொடர்ந்து அதிமுகவில் இருந்து வெளியே வந்த செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார்.
இந்தநிலையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.வான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்து தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை வைத்திலிங்கம் அளித்தார். இதையடுத்து வைத்திலிங்கம் திமுகவில் இன்று இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் அவர்கள் இருவரும் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் அதிகாரப்பூர்வமாக இணைய உள்ளார்.







