கங்குவா படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட நடிகர் சூர்யாவின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யாவின் நடிப்பில் சமீபகாலமாக வெளிவந்த எதற்கும் துணிந்தவன், ஜெய் பீம், சூரரை போற்று உள்ளிட்ட படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், சிறுத்தை சிவா இயக்கத்தில் தற்போது கங்குவா என்னும் படத்தில் சூர்யா நடித்துவருகிறார்.
ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் உருவாக்கும் இப்படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சுமார் பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கு, தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படம் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. பல கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்படும் சூர்யா இந்த படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளுக்காக உடல் எடையை ஏற்றி இருக்கிறார். சமீபத்தில் இவர் உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் கங்குவா படத்தின் ஷூட்டிங்கில் எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் நடிகர் சூர்யாவும், நடிகை திஷா பதானி மற்றும் இயக்குநர் சிறுத்தை சிவா ஆகியோர் இருப்பதை காணலாம்.
படப்பிடிப்பில் இருக்கும் போதே இந்தப்படத்தின் ஆடியோ, சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமை மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. அத்துடன் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ.80 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.








