நிர்வாகத்தில் ஆண்களுக்குப் பெண்கள் சமம் என்கிற நிலையைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்துள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
உலக மகளிர் தினத்தையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமானதாயகத்தில், மதிமுக மகளிர் அணி சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதிமுக சார்பில் வெற்றி பெற்ற மகளிர் வேட்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் மேடையில் பேசிய அவர், பெண்களுக்கு வாக்குரிமையை திராவிட இயக்கம் பெற்றுத் தந்ததாகவும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெண்களுக்கு சொத்துரிமை பெற்றுக் கொடுத்ததாகவும் தெரிவித்தார். மேலும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 50 சதவீதத்தைத் தாண்டி போட்டிப் போடுகின்ற இடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்துள்ளதாகவும், ஆண்களுக்குப் பெண் சமம் என்கிற
நிலையை நிர்வாகத்தில் கொடுத்துள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்தார். தொடர்ந்து பேசிய அவர், மது பழக்கம் இல்லாதவர்களாக, ஒழுக்கம் உள்ளவர்களாக தங்கள் பிள்ளைகளை வளர்க்க வேண்டும் இது தான் தமது மகளிர் தின செய்தி எனக் கூறி தனது உரையை முடிவு செய்தார்.







