கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பூச்சித் தாக்குதலுக்கு உள்ளான மா மரங்களை வெட்டி அகற்றும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
மாம்பழம் என்றாலே சேலம் தான் அனைவரின் நினைவுக்கு வரும். உண்மையில் கிருஷ்ணகிரியில் விளைவிக்கப்படும் மாம்பழமே சுவை மிகுந்த பழம் என அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 45 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் மா சாகுபடி நடைபெற்று வருகிறது. குறிப்பாக, ஊத்தங்கரை, பர்கூர், போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், சூளகிரி, ஓசூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில், 30-க்கும் மேற்பட்ட மா ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
கடந்த 5 ஆண்டுகளாக வறட்சி மற்றும் பூச்சித் தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால், மா விவசாயிகள் பெருமளவு வருவாய் இழப்பைச் சந்தித்து வருகின்றனர். விரைவில், மாம்பழ சீசன் தொடங்கவுள்ள நிலையில், மா மரங்களில் அதிகளவு பூக்கள் பூத்துள்ளன. ஆனால், நோய் தாக்குதல் காரணமாக பெரும்பாலான பூக்கள் உதிர்ந்து
விளைச்சல் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளதாக வருத்தம் தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.
பூச்சித் தாக்குதலுக்கு உள்ளான மா மரங்களை, விவசாயிகள் பலர் வெட்டி அகற்றி, மாற்று விவசாயத்திற்கு மாறி வருகின்றனர். இதனால், அழிவின் பாதையில் உள்ள மா விவசாயத்தைக் காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இந்த ஆண்டு 70 சதவீதம் அளவுக்கு மா விளைச்சல் குறைந்ததால், அனைத்து மாங்கூழ் நிலையங்களும் ஆந்திர மாநிலத்திலிருந்து மாம்பழங்களை வாங்குகின்றனர். இதனால் உள்ளூர் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.