வைகாசி விசாக திருவிழாவையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி விசாக திருவிழா இன்று வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகமும் நடக்கிறது.
வைகாசி விசாக விழாவில் பங்கேற்பதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு நடைபயணமாக வந்த வண்ணம் உள்ளனர். அலகு குத்தியும், காவடி சுமந்தும் முருகப்பெருமானுக்கு பக்தர்கள் இன்று நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.
பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது. வைகாசி விசாக விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் கோயிலில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு மேற்கொண்டார்.
இதையும் படியுங்கள் : இந்தியா – நேபாளம் இடையிலான எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் – பிரதமர் மோடி உறுதி!!
கோயில் வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் 650க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகையால் திருச்செந்தூர் விழாக்கோலம் பூண்டுள்ளது.







