நாகர்கோவில் அருகே நடிகர் வடிவேலுவின் சினிமா காட்சியை போல பழைய காரை விட்டு விட்டு சொகுசு காரை கடத்தி சென்ற வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் மகாராஜபுரத்தை சேர்ந்த பிரசாந்த் என்பவர் கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியில் தங்கி இருந்து துணி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் தனது சொகுசு காரை விற்பனை செய்ய விளம்பரம் செய்ததை அடுத்து, செல்போன் மூலமாக தொடர்பு கொண்ட ஒருவர் காரை தான் வாங்கி கொள்வதாகவும், அஞ்சுகிராமம் நான்கு வழி சாலை அருகே காரை கொண்டு வர கூறினார்.
பிரசாந்த் காரை கொண்டு சென்ற போது, தனது காரை நிறுத்தி விட்டு பிரசாந்த்தின் காரை அந்த இளைஞர் எடுத்து சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அந்த இளைஞர் திரும்பி வராததால் பதற்றம் அடைந்த பிரசாந்த் போலீசில் புகார் அளித்தார். தனிப்படை அமைத்து சொகுசு காரை திருடி சென்றவரை போலீசார் தேடிவந்த நிலையில் குருந்தன்கோடு பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவரை கைது செய்து சொகுசு காரை பறிமுதல் செய்தனர்.
- பி.ஜேம்ஸ் லிசா








