Uttarakhand | “நிலச்சரிவில் சிக்கி தவிக்கும் தமிழர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்க நடவடிக்கை” – கடலூர் ஆட்சியர் நியூஸ்7 தமிழுக்கு தகவல்!

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கியுள்ள தமிழர்களை ஹெலிகாப்டர் மூலம் விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் நியூஸ்7 தமிழுக்கு தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த…

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கியுள்ள தமிழர்களை ஹெலிகாப்டர் மூலம் விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் நியூஸ்7 தமிழுக்கு தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த 30 பேர் (17 பெண்கள் உட்பட) உத்தரகாண்ட் மாநிலம் ஆதி கைலாஷ்க்கு ஆன்மிக சுற்றுலா செல்ல முடிவு செய்ததன்படி அவர்கள் கடந்த செப். 1-ம் தேதி சென்னையில் இருந்து ரயில் மூலம் உத்தரகாண்ட் சென்றுள்ளனர். தொடர்ந்து அங்கிருந்து வேன் மூலம் அனைவரும் அங்குள்ள ஆன்மிக தலங்களுக்கு சென்று சுற்றி பார்த்து வந்தனர். இதனிடையே உத்தரகாண்டில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், ஆன்மிக சுற்றுலா சென்ற 30 பேரும் ஆதிகைலாஷ்க்கு வேனில் புறப்பட்டனர்.

அப்போது பித்தோரகர் மாவட்டம் அருகில் சென்ற போது, ஆதி கைலாஷ் பகுதியில் இருந்து 18 கி.மீ. தொலைவில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ஆதி கைலாஷ் பகுதிக்கு செல்ல முடியாமலும், சொந்த ஊருக்கு திரும்ப முடியாமலும் 30 பேரும் தவித்தனர். மேலும் இதுபற்றி செல்போன் மூலம் கடலூர் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், உத்தரகாண்ட் மாநிலம் பித்தோரகர் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு 30 பேரையும் மீட்டு பாதுகாப்பாக தங்க வைக்குமாறு கேட்டுக் கொண்டார். அதன்பேரில் 30 பேரும் அங்குள்ள மீட்பு குழுவினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். தொடர்ந்து அங்குள்ள ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கடலூர் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நியூஸ்7 தமிழுக்கு, “உத்தரகாண்டில் சிக்கிய சிதம்பரத்தை சேர்ந்த 30 பேரும் பாதுகாப்பாக அங்குள்ள ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை பாதுகாப்பாக கடலூருக்கு அனுப்பி வைக்கும்படி, அங்குள்ள மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு கேட்ட போது, வானிலையை பொறுத்து ஹெலிகாப்டர் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்” இவ்வாறு தகவல் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.