உத்தரகாண்ட் சுரங்க விபத்து: மீட்கப்பட்ட தொழிலாளர்கள் வீடு திரும்ப எய்ம்ஸ் மருத்துவர்கள் பரிந்துரை!

உத்தரகாண்ட் சுரங்க விபத்திலிருந்து மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களும் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும்,  அவர்கள் வீட்டிற்கு செல்ல பரிந்துரை செய்துள்ளதாகவும் மருத்துவர் குழு தெரிவித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் சில்க்யாரா பகுதியில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் சிக்கிக்…

உத்தரகாண்ட் சுரங்க விபத்திலிருந்து மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களும் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும்,  அவர்கள் வீட்டிற்கு செல்ல பரிந்துரை செய்துள்ளதாகவும் மருத்துவர் குழு தெரிவித்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் சில்க்யாரா பகுதியில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் சிக்கிக் கொண்ட 41 தொழிலாளர்களும் 17 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட தொடர் மீட்பு பணிகளின் பயனாக கடந்த 28-ம் தேதி பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.  பின்னர் ராணுவத்துக்குச் சொந்தமான சினூக் ரக ஹெலிகாப்டர் மூலம் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனைத்து தொழிலாளர்களும் அனுமதிக்கப்பட்டனர்.  அங்கு அவர்களுக்கு அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

இது குறித்து மருத்துவர் ரவிகாந்த் செய்தியாளர்களிடம் கூறும்போது,  “அனைத்து தொழிலாளர்களுக்கும் ரத்தப் பரிசோதனை,  எக்ஸ்-ரே,  இசிஜி உள்ளிட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.  இதில் அவர்களுடைய உடல்நிலை சீராக இருப்பது தெரிய வந்துள்ளது.  எனவே அனைவரும் வீடு திரும்பலாம் என்று அவர்களிடம் தெரிவித்துள்ளோம்.

தொழிலாளர்கள் 17 நாட்களாக சுரங்கத்துக்குள் சிக்கியிருந்ததால்,  அவர்கள் இந்த புதிய சூழலுக்கு பழக வேண்டும்.  எனவே,  2 வாரங்களுக்குப் பிறகு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்” என்றார்.

மீட்கப்பட்ட தொழிலாளர்கள் 41 பேருக்கும் தலா 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் எனவும்,  அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை வழங்கப்படும் என்றும் உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி கூறியது குறிப்பிடத்தக்கது.  மேலும் மீட்பு குழுவினரின் கடின உழைப்பால் தான் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.