திரையரங்குகளில் நல்ல வரவேற்பையும், பொழிவான விமர்சனத்தையும் குவித்த ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
‘ஜிகர்தண்டா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. தீபாவளியை முன்னிட்டு வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
படம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வருவதாலும், ஜப்பான் படத்தின் கடும் தோல்வியால் இப்படத்தின் முதல்நாள் வசூலை விட அடுத்தடுத்த நாள்களின் வசூல் அதிகரித்தன. தொடர்ந்து இப்படம் வெளியாகி 3 வாரங்கள் ஆன நிலையில் உலகளவில் ரூ.66 கோடி வசூலையும், தமிழ்நாட்டில் மட்டும் 40 கோடி வசூலையும் கடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தயாரான ஜகமே தந்திரம், மகான் ஆகிய படங்கள் நேரடியாக ஓடிடி வெளியீட்டாக வந்தன. இதனால், 4 ஆண்டுகள் கழித்து கார்த்திக் சுப்பராஜின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரையரங்க வெளியீடாக வந்ததால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர்.
https://twitter.com/Netflix_INSouth/status/1730429009345839240
இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து நெட்பிளிக்ஸ் தளம் அறிவிப்பு ஒன்றை தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படம் வரும் டிச. 8-ம் தேதியன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என அறிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் இப்படம் வெளியாகும் என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.







