மும்பையில் உள்ள பிரபல உணவகத்தில் பரிமாறப்பட்ட சிக்கன் உணவில் எலி இறந்து கிடந்ததை கண்டறிந்த வாடிக்கையாளர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் உணவக மேலாளர் மற்றும் சமையல்காரர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள பிரபல உணவகம் ஒன்றிற்கு அனுராக் சிங் என்ற நபர் தனது நண்பருடன் உணவு சாப்பிடச் சென்றுள்ளார். அப்போது அவர்கள் ரொட்டியுடன் ஒரு சிக்கன் கறி மசாலா மற்றும் மட்டன் தாலி ஆகியவற்றை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர். பின்னர் வந்த உணவில் வித்தியாசமான ஒரு இறைச்சித் துண்டைக் கண்ட அவர்கள், கூர்ந்து கவனித்தபோது தான், அது எலி இறைச்சித் துண்டு என்பதை தெரிந்துக் கொண்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே உணவக மேலாளரிடம் கேட்டபோது அவர் மழுப்பலாக பதிலளித்துள்ளார். இதனால் பாந்த்ரா காவல் நிலையத்தில் அனுராக் சிங் புகார் அளித்ததையடுத்து, உணவக மேலாளர் விவியன் ஆல்பர்ட் ஷிகாவர், அப்போது ஓட்டலில் இருந்த சமையல்காரர், சிக்கன் சப்ளையர் ஆகியோர் மீது போலீஸார் உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பி.ஜேம்ஸ் லிசா








