நடிகர் ரஜினிகாந்தை சந்திப்பதற்காக 55 நாட்கள் அதாவது கிட்டத்தட்ட 2 மாதங்களாக இமயமலைக்கு நடந்து சென்ற தீவிர ரசிகரை ரஜினி சந்தித்த நிகழ்வு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த 10ஆம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்திய நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், படம் வெளியாவதற்கு முன்பே ரஜினிகாந்த் ஒரு வாரம் ஆன்மீக சுற்றுப்பயணமாக இமயமலைக்கு புறப்பட்டு சென்றார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இமயமலைக்கு செல்லாமல் இருந்த அவர், தற்போது 4 ஆண்டுகளுக்கு பின்னர் தன்னுடைய பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ய உள்ளார்.
இமயமலை பயணம் முடிந்தவுடன் இன்னும் ஒரு சில தினங்களில் சென்னை திரும்ப உள்ள ரஜினி, ஜெயிலர் பட வெற்றியை படக்குழுவுடன் கொண்டாட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இமயமலை பயணத்தின் போது செல்லும் இடமெல்லாம் ரஜினிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு எடுக்கப்படும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள தயானந்த் சரஸ்வதி மடம், சரஸ்வதி நதி மறையும் இடத்திற்கு சென்ற ரஜினி அங்கு குருக்களிடம் ஆசி பெற்றார். பின்னர் அங்கிருந்து பத்ரிநாத் கோயிலுக்குச் சென்ற அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து வியாசர் குகைக்குச் சென்று இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபயணம் மேற்கொண்டு மஹாவதார் பாபாஜி குகையை அடைந்தார். அங்கு அவர் தனது தீவிர ரசிகரான ஒரு இளைஞனை சந்தித்தார்.
அந்த இளைஞர் சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்திப்பதற்காக சென்னையில் இருந்து உத்தரகாண்ட் வரை கிட்டத்தட்ட 55 நாட்கள் நடந்தே சென்றுள்ளார். இதனை அறிந்து மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் உடனே அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டதோடு நிதியுதவியும் அளித்துள்ளார். மேலும் அந்த இளைஞர் குளிர்ந்த காலநிலையில் மரத்தடியில் உறங்குவதை கேள்விப்பட்டு உடனடியாக அவரை ஒரு சன்யாசியுடன் வேறு ஒரு சிறிய இடத்திற்கு மாற்ற உதவியதாக ரஜினிகாந்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ரா.அர்ஜுனமூர்த்தி, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அவர் பகிர்ந்துள்ள புகைபபடத்தில், ரஜினிகாந்த் குகைக்கு வெளியே நின்று அந்த இளைஞரை அன்புடன் பிடித்துக் கொண்டிருப்பதை காணலாம். ரஜினிகாந்தை சந்திப்பதற்காக அந்த நபர் சென்னையில் இருந்து உத்தரகாண்டில் உள்ள மஹாவதார் பாபாஜி குகைக்கு 55 நாட்கள் நடந்து வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
https://twitter.com/RaArjunamurthy/status/1691397580671037440?s=20
- பி.ஜேம்ஸ் லிசா
.









