தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு, நீண்டகால சுவாசப் பாதிப்பு காரணமாக, 2026-ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ஆம் தேதியன்று எம்.ஜி.எம். ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். முறையான மருத்துவச் சிகிச்சைகள் மற்றும் எங்களது பல்துறை மருத்துவக் குழுவினரின் தீவிர முயற்சிகள் இருந்தபோதிலும், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது.
தொடர்ந்து, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதன் விளைவாக, நேற்று பிற்பகல் 2:24 மணிக்கு அவர் காலமானார். அவரது உடல் பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மறைந்த வி.எஸ். பாபுவின் உடலுக்கு விசிக தலைவர் திருமாவளவன் நேரில் சென்று மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
“கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். விரைந்து நலம் பெற்று வீடு திரும்புவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார்.
அவர் நீண்ட காலம் அரசியல் களத்தில் பணியாற்றியவர். திராவிட முன்னேற்றக் கழகத்திலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும் பொறுப்பேற்று, வடசென்னை பகுதியில் திறம்படப் பணியாற்றியவர்.
திமுகவில் அவர் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்திலிருந்தே அவர் எனக்கு அறிமுகம். தினகரன் அவர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு நலம் விசாரித்தேன். விரைவில் நலம் பெற்று வீடு திரும்புவார் என்றெல்லாம் உறுதியளித்தார்கள். ஆனால், இவ்வாறு மாரடைப்பு ஏற்பட்டு அவர் காலமானார் என்ற செய்தி அறிந்ததும் மிகவும் வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், தமிழக வெற்றிக் கழகத் தோழர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
அதேபோல, மறைந்த கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபுவின் உடலுக்கு திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு நேரில் அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசியதாவது:
“மறைந்த கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு, வடசென்னையில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் கவனத்தையும் பெற்றவர்.
இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், மூன்று முறை மாமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை மண்டலக் குழுத் தலைவராகவும் இருந்து வடசென்னையில் மக்கள் பணியாற்றியவர்.
மறைந்த சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு, திராவிட முன்னேற்றக் கழகத்தில் நீண்ட காலம் பயணித்தவர். மேலும், திமுக சார்பிலும், திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் சார்பிலும் மறைந்த சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினோம்” என்றார்.
இதேபோல, முன்னதாக முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் கீர்த்தனா, விக்னேஷ், ஆதவ் அர்ஜுனா, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.




