இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

இன்று (நவம்பர் 20) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அக்வான் புயல் கரையை கடக்க வாய்ப்பு!

வங்கக்கடலில் நிலவிய ‘அக்வான்’ (Akvan) தீவிர புயல் வடக்கு திசையில் நகர்ந்து, நேற்று (நவம்பர் 19) காலை 8.30 மணியளவில் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவியது. இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (நவம்பர் 20) நண்பகல் நர்சாபூர் மற்றும் பூரிக்கு இடையே கோபால்பூருக்கு அருகில் வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையை கடக்கக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்!

புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 90 முதல் 100 கி.மீ. வேகத்திலும், இடையிடையே மணிக்கு 110 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக்கடலில் வளிமண்டல சுழற்சி!

மேலும், சுமார் 3.1 கி.மீ. உயரம் வரை தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு லட்சத்தீவுப் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

இன்று மழைக்கு வாய்ப்பு!

இதன் காரணமாக இன்று (நவம்பர் 20) தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.