அமெரிக்காவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்; உலக தலைவர்களுடன் ஆலோசனை

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சர்வதேச நிதி ஆணையம், உலக வங்கி, ஜி20 அமைப்பு தலைவர்களுடன் முக்கிய ஆலோசனையில் கலந்து கொண்டார். அமெரிக்காவுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,…

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சர்வதேச நிதி ஆணையம், உலக வங்கி, ஜி20 அமைப்பு தலைவர்களுடன் முக்கிய ஆலோசனையில் கலந்து கொண்டார்.

அமெரிக்காவுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வாஷிங்டன் டி.சி. நகரில் அந்நாட்டு நிதியமைச்சர் ஜேனட் எல்லன்னை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் இரு நாட்டு தலைவர்களும், நடப்பு சர்வதேச பொது பொருளாதார சூழ்நிலை உள்ளிட்ட பரஸ்பர நலன்களுக்கான பிற விவகாரங்கள் பற்றி ஆலோசனை மேற்கொண்டனர்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த பயணத்தில் ஜப்பான், தென் கொரியா, சவுதி அரேபியா, ஆஸ்திரேலியா, பூடான், நியூசிலாந்து மற்றும் ஈரான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடனான இருதரப்பு சந்திப்புகளிலும் நிதியமைச்சர் பங்கேற்றார். இதேபோன்று, சர்வதேச நிதி ஆணையம், உலக வங்கி, ஜி20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி கவர்னர் உள்ளிட்டோருடனான வருடாந்திர கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டார்.

இதன்படி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சர்வதேச நிதியமைச்சர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் உயர்மட்ட தலைவர்களை அடுத்தடுத்து சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் நேற்று ஈடுபட்டார். எகிப்து நாட்டின் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சர் ராணியா அல் மஷாத் உடன், இரு நாடுகளின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பற்றிய பார்வைகளை மத்திய அமைச்சர் பகிர்ந்து கொண்டார்.

இதன்பின் நெதர்லாந்து நிதி மந்திரி சிக்ரித் காக் உடனான சந்திப்பில் ஜி20, சர்வதேச சரக்குகள், கடன் மற்றும் பருவகால விவகாரங்கள் ஆகியவற்றுடன் தொடர்புடைய பல்வேறு செயல் திட்டங்கள் பற்றியும் ஆலோசனை நடத்தப்பட்டது. சவுதி அரேபிய நிதியமைச்சர் முகமது அல் ஜடான் உடனான சந்திப்பில் பல்வேறு பொருளாதார மற்றும் நிதி சார்ந்த விவகாரங்கள் பற்றியும் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பு பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. தென்கொரிய துணை பிரதமர் மற்றும் நிதியமைச்சரான சூ கியூங்-ஹோ உடனான சந்திப்பில், ஜி20 தலைமைத்துவத்திற்கு இந்தியாவுக்கு ஆதரவு தரும்படி மத்தியமைச்சர் கேட்டு கொண்டார்.

இதன்பின்னர், முன்னணி வர்த்தக தலைவர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன், இந்தியாவின் கொள்கை முக்கியத்துவங்கள் பற்றி சுட்டி காட்டி பேசியதுடன், முதலீடு செய்வதற்கு ஏற்ற நாடாக இந்தியாவை அடையாளப்படுத்தும் வகையில், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையிலான திட்டமிட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.