ஓடும் காரில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை: எஸ்.ஐ. தேர்வு எழுதியவருக்கு நேர்ந்த கொடூரம்

சப்- இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதிவிட்டு வந்த இளம் பெண், ஓடும் காரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மதுராவைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் அவர். அவருக்கு…

சப்- இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதிவிட்டு வந்த இளம் பெண், ஓடும் காரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் மதுராவைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் அவர். அவருக்கு சமூக வலைதளம் மூலம் அறிமுகமானார், ஹரியானா மாநிலம் பல்வால் பகுதியைச் சேர்ந்த தஜ்வீர். இவரும் அடிக்கடி சாட் செய்துள்ளனர். பின்னர் நெருங்கிய நண்பர்களாகினர். தஜ்வீர், ரொம்ப நல்லவர் என்று நம்பினார் அந்த இளம் பெண்.

இந்நிலையில், அவருக்கு சப் – இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான எழுத்துத் தேர்வு ஆக்ராவில் நடந்தது. இதற்காக அவர் செல்ல இருப்பதாகக் கூறினார். ’உங்கள் ஊரில் இருந்து பேருந்தில் வரவேண்டாம், நான் கார் கொண்டு வருகிறேன். சேர்ந்து போகலாம்’ என்று கூறியிருக்கிறார் தஜ்வீர்.

சரி என்றார் அந்த பெண். சொன்னபடி அந்தப் பெண்ணின் வீட்டுக்கு காரில் வந்தார் அவர். காரை டிரைவர் ஓட்டி வந்தார். நம்பி காரில் ஏறினார் இளம் பெண். ஆக்ராவில் தேர்வு எழுதிவிட்டு திரும்பும்போது, ஜாலியாக பேசிக்கொண்டு வந்த தஜ்வீர், பிறகு போதைப் பொருளை பயன்படுத்தத் தொடங்கினார். சிறிது நேரத்துக்குப் பிறகு, ஓடும் காரிலேயே அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார். அந்தப் பெண் கதறியும் விடவில்லை அவர்.

பின்னர் காரை, டெல்லி – ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் கோசிகாலா என்ற பகுதியில் நிறுத்தி, அந்தப் பெண்ணை இறக்கிவிட்டுவிட்டு சென்றுவிட்டனர். அங்கிருந்து வீட்டுக்கு வந்த இளம் பெண், நிலைமையை சொல்லி அழுதிருக்கிறார். பிறகு அவர் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றார். குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுபற்றி வழக்குப் பதிவு செய்த போலிசார், தஜ்வீரை கைது செய்துள்ளனர்.

உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.