உத்தரகாண்ட், கோவா சட்டசபைகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் நிலையில் உத்தரபிரதேசத்தில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. இங்குள்ள 13 மாவட்டங்களில் மொத்தம் 70 தொகுதிகள் உள்ளன. அனைத்து தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. 81 லட்சத்து 72 ஆயிரத்து 173 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், 11 ஆயிரத்து 697 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதேபோல் 40 தொகுதிகளைக் கொண்ட கோவா மாநிலத்திற்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் 332 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆயிரத்து 722 வாக்குச்சாவடிகளில் 11 லட்சத்து 56 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். பெண் வாக்காளர்களை கவரும் வகையில் 105 வாக்கு சாவடிகளில் பெண் தேர்தல் அதிகாரிகள் மட்டுமே பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அந்த அகையில் உத்திரப்பிரதேசத்தில் இன்று 2-ம் கட்ட வாக்குப் பதிவு நடக்கிறது. 9 மாவட்டங்களில் அடங்கிய 55 தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. மொரதாபாத், பரேய்லி, ஷாஜகான்பூர் உள்ளிட்ட 55 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 17 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் சுமார் 2 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். வாக்குப்பதிவை முன்னிட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த தேர்தல் தொடங்கியதையடுத்து, “உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், கோவா ஆகிய மாநிலங்களில் இன்று நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கும் தகுதி உள்ள அனைவரும் வாக்களித்து ஜனநாயகத்தின் திருவிழாவை வலுப்படுத்த வேண்டும்” என பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், தேர்தல் நடைபெறும் உத்தரபிரதேசம், கோவா, உத்தரகாண்ட் ஆகிய மூன்றும் பாஜக ஆளும் மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.