போரில் பங்கேற்க விருப்பமில்லை; உயிரை மாய்த்துக்கொண்ட ரஷ்ய ராப்பர்

உக்ரைனுக்கு எதிரான போரில் பங்கேற்பதைத் தவிர்ப்பதற்காக ரஷ்ய ராப்பர் ஒருவர் உயிரை மாத்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ’வாக்கி’ என்று எல்லோராலும் அறியப்படும் இவான் விட்டலிவிச் பெடுனின், ஒரு ரஷ்ய ராப்பர் ஆவார்.…

உக்ரைனுக்கு எதிரான போரில் பங்கேற்பதைத் தவிர்ப்பதற்காக ரஷ்ய ராப்பர் ஒருவர் உயிரை மாத்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

’வாக்கி’ என்று எல்லோராலும் அறியப்படும் இவான் விட்டலிவிச் பெடுனின், ஒரு ரஷ்ய ராப்பர் ஆவார். 27 வயதான இவர் சமூக ஊடகங்களில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு தனது கண்டனக் குரலை தொடர்ந்து எழுப்பி வந்தார். இந்நிலையில் உக்ரைனுக்கு எதிரான போரில் இராணுவ வயதுடைய அனைத்து ஆண்களும் பங்கேற்பதை ரஷ்யா கட்டாயமாக்கியதால், வாக்கி உயரமான கட்டடத்தில் இருந்து குதித்து உயிரிழப்பு செய்து கொண்டுள்ளார்.

இறுதிப் பதிவாக தனது டெலகிராம் சேனலில் வீடியோ ஒன்றை வாக்கி வெளியிட்டுள்ளார். அதில் தனது ரசிகர்களிடம், “இந்த வீடியோவை நீங்கள் பார்க்கிறீர்கள் என்றால், நான் இப்போது உயிருடன் இல்லை என்று அர்த்தம். கொலை செய்த பாவத்தை என் ஆன்மா மீது சுமத்த முடியாது. நான் அதை விரும்பவில்லை. எந்தவொரு இலட்சியத்திற்காகவும் யாரையும் கொல்லத் தயாராக இல்லை. நான் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருப்பதைத் தேர்வு செய்கிறேன். ஆயுதம் ஏந்தி என் இனத்தைக் கொல்ல நான் தயாராக இல்லை” என்று உருக்கமாக பேசியுள்ளார்.

முன்னதாக ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றி, மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாக்கி, மனநோயைக் காரணம் காட்டி போரில் பங்கேற்பதைத் தவிர்க்க முயன்றார். ஆனால் அவரது கோரிக்கையை ரஷ்ய இராணுவம் நிராகரித்தது. இந்நிலையில் வாக்கி உயரமான கட்டடத்தில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். ரஷ்யாவின் கிராஸ்னோடார் நகரில் உள்ள காங்கிரஸ்நாயா தெருவில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

பிற உயிரைக் கொல்வதற்கு மறுப்பு தெரிவித்து, தன் உயிரை மாய்த்துக்கொண்ட வாக்கியின் மரணம், பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.