தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் நாளை புதிய தேசிய கட்சியை தொடங்குவதாகவும், அதன் அறிவிப்பு வெளியிடப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி 2-வது முறையாக ஆட்சியில் இருந்து வருகிறது. முதலமைச்சராக சந்திரசேகர ராவ் உள்ளார். இந்நிலையில், 2024 பாராளுமன்ற லோக்சபா தேர்தலில் பாஜக-வை எதிர்க்க தேசிய அளவில் கூட்டணியை உருவாக்க அவர் திட்டமிட்டுள்ளார். இதனால் சில மாதங்களுக்கு முன்பு பீஹார் முதலமைச்சர் நிதிஷ் குமார், சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே என பல்வறு எதிர்கட்சி தலைவர்களை அவர் சந்தித்து பேசினார்.
மேலும் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த கட்சியின் ஆண்டு விழாவில் தேசிய அரசியலில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த மாதம் கட்சி தலைவரும், முதல்-மந்திரியுமான சந்திரசேகர ராவ், தேசிய அரசியலில் குதிக்க வேண்டும் என்று கட்சியின் மாவட்ட தலைவர்கள் கேட்டுக்கொண்டனர்.
இதையடுத்து கடந்த மாதம் 12-ம் தேதி அம்மாநில சட்டப்பேரவையில் பேசிய சந்திரசேகர ராவ், தேசிய கட்சி தொடங்கப் போவதாக முதல் முதலில் அறிவித்தார். தேசிய அளவில் கால் பதிக்கும் நோக்கத்திலும், பாஜகவுக்கு எதிராக புதிய அணி உருவாக்கும் நோக்கத்திலும் சந்திரசேகர ராவ், பிற தலைவர்களை சந்திக்கத் தொடங்கினார். இந்நிலையில், நாளை (விஜயதசமி தினத்தன்று ) புதிய கட்சியை தொடங்குவது பற்றி சந்திரசேகர ராவ் அறிவிப்பு வெளியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
-இரா.நம்பிராஜன்








