தீண்டாமை கொடுமை விவகாரம்: பாஞ்சாகுளத்தில் புதிய கிராம நிர்வாக அலுவலர் நியமனம்

தென்காசி அருகே ஊர்கட்டுப்பாட்டால் பள்ளி மாணவர்களை புறக்கணித்ததாக நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டதை தொடர்ந்து பாஞ்சாகுளத்தில் புதிய கிராம நிர்வாக அலுவலர் நியமனம் செய்யப்பட்டதோடு, இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. …

தென்காசி அருகே ஊர்கட்டுப்பாட்டால் பள்ளி மாணவர்களை புறக்கணித்ததாக நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டதை தொடர்ந்து பாஞ்சாகுளத்தில் புதிய கிராம நிர்வாக அலுவலர் நியமனம் செய்யப்பட்டதோடு, இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகேயுள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் பட்டியலினத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் திண்பண்டங்கள் வாங்குவதற்கு கடைக்கு சென்றுள்ளனர். ஆனால் கடைக்காரர் திண்பண்டங்கள் வழங்க முடியாது எனக் கூறியுள்ளார். ஏன் கொடுக்க முடியாது என பள்ளி சிறுவர்கள் கேட்கவும், ஊரில் கட்டுப்பாடு போடப்பட்டுள்ளது எனக் கடைக்காரர் விளக்கமளித்துள்ளார்.

இது குறித்த வீடியோ காட்சிகளுடன் நியூஸ் 7 தமிழ் முதலில் செய்தி வெளியிட்டது. பின்னர் இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதற்கு கண்டனம் எழுந்த நிலையில், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்தார்.
அதில், இந்த விவகாரத்தில் 153a பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து செய்கை, பேச்சு, எழுத்தால் வன்முறை தூண்டுதல், சமூகத்தில் பிரச்சினை ஏற்படுத்துதல் போன்ற பிரிவில் வழக்கு பதிவு செய்து இருவரை கைது செய்ததாக தெரிவித்தார்.

மேலும் அந்த சிறுவர்கள் திண்பண்டம் வாங்கிய பெட்டி கடைக்கும் சீல் வைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், 2 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரத்தில் எஸ்.சி, எஸ்.டி. சட்டத்தின் முக்கிய பிரிவை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

பட்டியலின மக்களுக்கு எதிராக குற்றங்களை புரியும் குற்றவாளிகளை சில காலங்களுக்கு அவ்விடத்தை விட்டு வெளியேற்ற கூடிய சட்ட பிரிவு (Externment provision) வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் உள்ளது. சமூக ஒடுக்குமுறையை தடுக்கவும், தொடர்ந்து பிரச்சனை ஏதும் ஏற்படாமல் இருக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அச்சட்டப்பிரிவை இவ்வழக்கில் பயன்படுத்த உள்ளதாக தென்மண்டல காவல்துறை தலைவர் ஆஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தீண்டாமை கொடுமை விவகாரத்தில் அடுத்த நடவடிக்கையாக, கிராம நிர்வாக அலுவலராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த மல்லிகா அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் பாஞ்சாகுளத்தில் புதிய கிராம நிர்வாக அலுவலராக மாரியப்பன் என்பவரை நியமித்து சங்கரன்கோவில் கோட்டாட்சியர் சுப்புலட்சுமி தற்போது உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக நியூஸ் 7 தமிழ் தலைமை செய்தியாளர் சுடலைக்குமார் விளக்கம் கேட்டதற்கு நிர்வாக வசதிக்காக மட்டுமே மல்லிகா விடுவிக்கப்பட்டதாகவும், துறை ரீதியான நடவடிக்கைகள் ஏதும் இல்லை எனவும் சங்கரன்கோவில் கோட்டாட்சியர் சுப்புலட்சுமி நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.