விசாகப்பட்டினத்தில், நடிகர் பவன் கல்யாண் நடித்து வெளியாக இருக்கும் ’வக்கீல் சாப்’ திரைப்படத்தின் ட்ரைலரை காண ரசிகர்கள் திரையரங்கின் கண்ணாடியை உடைத்துகொண்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாலிவுட்டில் 2016 ஆம் ஆண்டு அமிதாப் பச்சனின் நடிப்பில் வெளியான ’PINK’ திரைப்படத்தின் தெலுங்கு சிமேக்கான ’வக்கீல் சாப்’ (vakeel saab) என்ற திரைப்படத்தை வேணு ஸ்ரீராம் தயாரித்துள்ளார். இந்த படத்தில் தெலுங்கு சுப்பர் ஸ்டார் பவன் கல்யாண், ஸ்ருதி ஹாசன், அஞ்சலி, நிவேதா தாமஸ் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் ட்ரைலரை ஹோலி பண்டிகை தினத்தன்று வெளியிட இருப்பதாக படக்குழுவினர் தகவல் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ட்ரைலர் நேற்று விசாகப்பட்டினத்தில் குறிப்பிட்ட சில திரையரங்குகளில் வெளியானது.
படத்தின் ட்ரைலரை காண 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே 2 ஆயிரத்திற்கும் மேலான ரசிகர்கள் திரையரங்கு முன் திரண்டிருந்தனர். மேலும், நடிகர் பவன் கல்யாண் புகைப்படத்திற்கு பூஜை செய்தும், தேங்காய்கள் உடைத்தும் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். பின்னர், ட்ரைலர் வெளியானதை அடுத்து அதை காண திரையரங்கின் கண்ணாடியை உடைத்து தள்ளிக்கொண்டு ரசிகர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டதோடு, சிலருக்கு காயங்களும் ஏற்பட்டது. இதன் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.







