”புதுச்சேரியை புதுமையான யூனியன் பிரதேசமாக மாற்றுவோம்”

புதுச்சேரியை புதுமையான யூனியன் பிரதேசமாக மாற்றுவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். அப்போது அதே, விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத்தருவோம் என்று கூறினார். புதுச்சேரிக்கு…

புதுச்சேரியை புதுமையான யூனியன் பிரதேசமாக மாற்றுவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். அப்போது அதே, விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத்தருவோம் என்று கூறினார்.

புதுச்சேரிக்கு ஒருநாள் அரசு முறை பயணமாக வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து விழாவில் பேசிய அவர், பிரதமர் மோடி உறுதியளித்ததை போல “பெஸ்ட்” புதுச்சேரியாக்குவோம் என்றும் புதுச்சேரியை புதுமையான யூனியன் பிரதேசமாக மாற்ற முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

புதுச்சேரியில் 150 கோடியில் கழிவு நீர் வாய்க்கால்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், புதுச்சேரியில் 24 மெகாவாட்டில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறிய அமித்ஷா. மேலும் காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் மட்டுமே இருந்ததாகவும், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் வளர்ச்சியைதான் காணமுடிவதாகவும் அமித்ஷா குறிப்பிட்டார்.

விழாவில் முன்னதாக பேசிய புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசின் உதவியை பெற்று தருவதுடன், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தும் பெற்றுத்தருவோம் என உறுதியளித்தார். மேலும் மாநில வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு கூடுதல் நிதி வழங்கும் என தாம் நம்புவதாகவும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.