மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2026-27 நிதியாண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதாக தமிழ் நாட்டிற்குகான முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்ததை விட குறைவாகவே அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
இந்த பட்ஜெட்டில் நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள 7 அதிவேக ரயில் வழித்தடங்களில், தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை – பெங்களூரு மற்றும் சென்னை – ஹைதராபாத் ஆகிய இரண்டு முக்கிய வழித்தடங்கள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் நாட்டில் உள்ள ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட நாடு முழுவது உள்ள 15 தொல்லியல் இடங்களில் கலாச்சார மையங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கபப்ட்டுள்ளது. இதன் படி ஆதிச்சநல்லூரில் ஏற்கனவே கட்டப்பட்டு வரும் அருங்காட்சியகத்துடன் சேர்த்து, ஒரு “கலாச்சார மையம்” (Experiential Cultural Center) அமைக்கப்பட உள்ளது.
பூமியிலிருந்து அரிய வகை கனிமங்களை தோண்டி எடுப்பதற்கான பிரத்தியேக அரிய கனிம வழித்தடம் (Rare Earth Corridor) அமைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அறிவித்தார். இதன் மூலம் ஒடிசா ,கேரளா ,ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அரிய வகை கனிமங்களுக்கான தொழில் வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.
மத்திய பட்ஜெட்டில் நாடு முழுவதும் மலையேற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தமிழ் நாட்டின் பொதிகை மலையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மலையேற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் தமிழ்நாட்டின் பழவேற்காடு ஏரியில் பறவைகளை பார்வையிடும் சுற்றுலாவை ஊக்குவிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
அமெரிக்காவின் 50% இறக்குமதி வரி விதிப்பால் திருப்பூர் பின்னலாடைத் துறை நெருக்கடியில் உள்ளது. மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜவுளித் துறைக்கான ஒருங்கிணைந்த திட்டம் மானது ஒரு முக்கியமான மீட்பு நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்கா விதித்துள்ள அதிக வரியால், திருப்பூரின் ஒரு ஆடையின் விலை 10 டாலரிலிருந்து 16 டாலராக உயர்ந்துள்ளது. இதனை ஈடுகட்ட, உற்பத்திச் செலவு குறைக்கப்படுகிறது.







