பலத்த எதிர்பார்ப்புகளுக்கும், சவால்களுக்கும் மத்தியில், நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2021 – 2022ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து, விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், கடந்த 29ம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றிய பிறகு, 2 தினங்களுக்கு அவை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, இன்று நாடாளுமன்றம் மீண்டும் கூடிய நிலையில், காலை 11 மணியளவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2021-22ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
நிதி அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், அவர் தாக்கல் செய்யும் 3-வது நிதிநிலை அறிக்கை இதுவாகும். இதுவரை சிவப்பு நிற தோல் பையில் வைத்து, பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்த நடைமுறையில் மாற்றம் செய்து, இந்தியாவில் முதல்முறையாக நிதிநிலை அறிக்கை, இம்முறை காகிதங்கள் இன்றி டிஜிட்டல் வடிவத்தில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
கொரோனா பெருந்தொற்றால், நாடு இதுவரை காணாத நீண்ட ஊரடங்கு, பொது முடக்கத்தால் தொழில் பாதிப்பு ஆகியவற்றை சீரமைக்கும் வகையிலும், பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும், தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். முன்னதாக குடியரசு தலைவரை சந்தித்து, நிதிநிலை அறிக்கை நகலை அவர் வழங்கினார்.







