முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் : மின்வாரியம் சுற்றறிக்கை 

முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்ய என தமிழ்நாடு மின்சார வாரியம் அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கு  சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.  கடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.  சென்னை…

முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்ய என தமிழ்நாடு மின்சார வாரியம் அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கு  சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 
கடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.  சென்னை விமான நிலையத்தில் இருந்து அவரது கார் வெளியே வந்த போது சாலையின் இரு புறங்களிலும் இருந்த மின்விளக்குகள் அணைந்தன. காரில் இருந்து இறங்கிய அவர் பாஜக தொண்டர்களை பார்த்து கையசைத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இதனைத்தொடர்ந்து மின் தடையை கண்டித்து பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மின்தடை தற்செயலானது என்றும், உடனடியாக சரி செய்யப்பட்டதாகவும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். இதனை அரசியலாக்க விரும்பவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கு மின்வாரியம் சார்பில் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் “முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்ய  வேண்டும். முக்கிய பிரமுகர்கள் வருகையின் போதும், பிரதான அரசு நிகழ்வுகளின் போதும் மின் வாரிய அதிகாரிகள் நிகழ்வு நடைபெறும் இடங்களை ஆய்வு செய்து, மாற்று ஏற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
முக்கிய பிரமுகர்களின் வருகையின் போது நிகழ்வு நடைபெறும் இடங்களில் மின்சார வாரிய பொறியாளர்கள், ஊழியர்களும் பணியில் இருக்க வேண்டும்” என சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.