செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவிற்கு நிபந்தனையற்ற முன் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.
கடந்த 12ம் தேதி கோவில்பட்டி தொகுதிக்குட்பட்ட ஊத்துப்பட்டி விலக்கு அருகே தேர்தல் பறக்கும்படை குழு மாரிமுத்து எனும் அதிகாரி தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தது. இந்நிலையில் அவ்வழியாக வந்த அமைச்சர் கடம்பூர் ராஜுவின் வாகனத்தையும், அவருடன் வந்தவர்களின் வாகனங்களையும் சோதனைக்காக மாரிமுத்து நிறுத்தியுள்ளார். அப்போது வாகனத்தை விட்டு கீழே இறங்கிய அமைச்சர் கடம்பூர் ராஜு, பறக்கும் படைகுழு தலைவரையும் அவருடன் பணியிலிருந்தவர்களையும் பணி செய்ய விடாமல், ஒருமையில் பேசி மிரட்டியதாகவும், தேர்தல் பணி விபரத்தை தெரிவித்த பின்னரும் மிரட்டியதாகவும் கூறி புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கடம்பூர் ராஜூ மீது தூத்துக்குடி நாலாட்டின்புதூர் காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க கோரி அமைச்சர் கடம்பூர் ராஜு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இது அரசியல் உள்நோக்கத்தோடு பதியப்பட்ட வழக்கு. ஆகவே, நீதிமன்றம் மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்க உத்தரவிட வேண்டும்” என வாதிட்டார். அரசு தரப்பில், “முன்ஜாமீன் வழங்க எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கப்படாததோடு, தேர்தல் நேரம் என்பதால் நிபந்தனைகள் எதுவும் விதிக்க தேவையில்லை” என தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து நீதிபதி, “இந்திய குற்றவியல் பிரிவு 506 பிரிவு ஒன்றின் கீழ் பதியப்படும் அனைத்து வழக்குகளிலும் இதே நிலைப்பாடு பின்பற்றப்படுமா? என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, தேர்தல் நேரம் என்பதால் மனுதாரருக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.