மாற்றுக் கட்சியிலிருந்து அதிமுகவில் இணையும் அனைவருக்கும் கௌரவமான பதவிகள் வழங்கப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேமுதிக கட்சியை சேர்ந்த போடி நகர செயலாளர் சிங்கராஜ் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். பின்னர் ஓபிஎஸ்-க்கும், எம்பி ரவீந்தரநாத்துக்கும் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது பேசிய ஓ.பன்னீர்செல்வம் , அதிமுக தாய் மனம் கொண்ட கட்சி என்றும், இங்கு யார் வந்தாலும் அவர்களுக்கு உரிய மரியாதை அளித்து கௌரவமான பதவிகள் வழங்கி சிறப்பிப்போம் எனவும் கூறினார்.
பின்னர் பேசிய முன்னாள் தேமுதிக நகர செயலாளர் சிங்கராஜ், விஜயகாந்துக்கு பிறகு அவரது மனைவி பிரேமலதா சரியான முறையில் கட்சியை வழி நடத்தி செல்லவில்லை என குற்றம்சாட்டினார். மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் ஓ.பன்னீர்செல்வத்தை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்வோம் என சூளுரைத்தார்.







