சிவாஜி…மேஜர் சுந்தர்ராஜன்..நெருங்கிய நண்பர்கள் பிரிந்ததன் பின்னணியில் நடந்தது என்ன?…

சில சமயம் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு நிஜவாழ்க்கையில் அதிரடியான சம்பவங்கள் அரங்கேறிவிடும். சினிமாவில் இப்படி ஒரு காட்சி இருந்தால்கூட ரசிகர்கள் அதனை நம்புவதற்கு சிரமமாக இருக்கும் அளவிற்கு நிஜவாழ்க்கையில் சில சமயம் நம்ப முடியாத,…

சில சமயம் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு நிஜவாழ்க்கையில் அதிரடியான சம்பவங்கள் அரங்கேறிவிடும். சினிமாவில் இப்படி ஒரு காட்சி இருந்தால்கூட ரசிகர்கள் அதனை நம்புவதற்கு சிரமமாக இருக்கும் அளவிற்கு நிஜவாழ்க்கையில் சில சமயம் நம்ப முடியாத, ஆச்சர்யமூட்டும் சம்பவங்கள் அரங்கேறிவிடும். பழம்பெரும் நடிகரான மேஜர் சுந்தர்ராஜன் வாழ்க்கையில் அப்படி ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அது குறித்து பார்ப்போம்.

நாடகத்திலிருந்து திரையுலகிற்கு வந்து கோலோச்சிய பழம்பெரும் நடிகர்களில் மேஜர் சுந்தர்ராஜனும் குறிப்பிடத்தக்கவர். குணச்சித்திர கதாபாத்திரங்களில் தனது பண்பட்ட நடிப்பால் பரிமளித்த மேஜர் சுந்தர்ராஜன் 900க்கு  மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் குணச்சித்திரா கதாபாத்திரங்களிலேயே நடித்தாலும், வில்லன், காமெடி கதாபாத்திரங்களில்கூட பொருந்திப்போகும் அளவிற்கு நடிப்புத்துறையில் பல்வேறு கோணங்களில் முத்திரை பதித்துள்ளார் மேஜர் சுந்தர்ராஜன்.

1935ம் ஆண்டு தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிறந்த மேஜர் சுந்தர்ராஜன் கடந்த 2003ம் ஆண்டு தனது 67வது வயதில் சென்னையில் காலமானார். ஸ்ரீநிவாசன் சுந்தர்ராஜன் என்பதே அவரது இயற்பெயர். 1966ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த மேஜர் சந்திரகாந்த் படம் மூலம் புகழ்பெற்றதையடுத்து மேஜர் என்கிற அடைமொழி அவரது பெயரோடு சேர்ந்துகொண்டது. எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட உச்சநட்சத்திரங்களோடு ஏராளமான படங்களில் சேர்ந்து நடித்துள்ளார் சுந்தர்ராஜன். குறிப்பாக மற்ற நட்சத்திரங்களைவிட சிவாஜியுடனேயே இவர் மிகவும் அதிகமான படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே நெருங்கிய நட்பு உண்டு. மேஜர் சுந்தர்ராஜனின் மகன் கௌதமும் பிரபல நடிகர்தான். வானமே எல்லை, ஏழுமலை, அரண்மனை, செக்கச் சிவந்த வானம், கடந்த ஆண்டு வெளிவந்த கமலின் விக்ரம் உள்பட ஏராளமான படங்களில் கௌதம் நடித்துள்ளார்.

சினிமாவில் இப்படி ஒரு காட்சியை வைத்தால் நம்புவார்களா எனக் கேட்டுக்கொண்டே தனது  மகன் கௌதமிடம் தனது நிஜவாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்றை பகிர்ந்துகொண்டுள்ளார் மேஜர் சுந்தர்ராஜன்.

1965ம் ஆண்டு மேஜர் சுந்தர்ராஜனின் தாய் இறந்துவிட அதைப் பார்த்த  அதிர்ச்சி அடைந்த  அவரது தங்கை மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் அவரை அனுமதித்துவிட்டு தாயின் இறுதிச் சடங்குகளை முடித்திருக்கிறார் மேஜர் சுந்தர்ராஜன். செமி ஹோமா நிலைக்குச் சென்ற அவரது தங்கையின் உயிரை மருத்துவர்கள் போராடி மீட்டனர். நினை திரும்பி எழுந்தபாது அவருக்கு எல்லாம் நினைவிருக்கிறது தாய் இறந்து போன நிகழ்வைத் தவிர. தனது தாய் ஏன் தம்மை பார்க்க மருத்துவமனை வரவில்லை என்று கேட்டிருக்கிறார். தாய் இறந்ததை பார்த்த அதிர்ச்சியில்தான் தங்கைக்கு இப்படி ஆனது என்பதால் மீண்டும் அந்த செய்தியை இப்போதைக்கு அவரிடம் சொல்ல வேண்டாம் என மருத்துவர்கள் மேஜர் சுந்தர்ராஜனிடம் தெரிவித்திருந்தனர். அவர்களின் அறிவுரையை ஏற்று, தனது தாய் இறந்த செய்தியை தங்கையிடம் தெரிவிக்காமல் அவர் உயிரோடு இருப்பதுபோலவே காட்டிக்கொண்டார். அம்மா காசி யாத்திரைக்கு போயிருக்கிறார் எனக் கூறி சமாளித்த அவர்,  தங்கை  இதனை நம்ப வேண்டும் என்பதற்காக அவ்வபோது அம்மா எழுதியது போல் தாமே கடிதம் எழுதி தங்கையிடம் வந்து காண்பிப்பாராம்.

ஒரு வருடம் கழித்து மேஜர்சுந்தர்ராஜனின் தங்கை தனது அம்மா இறந்த அதே நாளில், அதே நேரத்தில், அதே அறைக்கு சென்றிருக்கிறார். அப்போது அறைக்குளிருந்து பெரும் அழுகுரல் வெடித்தது. ஓவென்று கதறியிருக்கிறார் மேஜர்சுந்தர்ராஜனின் தங்கை. என்னவென்று பதறியடித்து உள்ளே சென்று பார்த்தபோதுதான் அனைவருக்கும் விபரம் புரிந்திருக்கிறது. சரியாக ஒரு வருடம் கழித்து அதே நாளில், அதே நேரத்தில், அதே அறையில் தனது அம்மா இறந்துபோன நிகழ்வு மேஜர் சுந்தர்ராஜனின் தங்கையின் நினைக்கு வந்திருக்கிறது.  இதனை நினைத்து அனைவரும் ஆச்சர்யப்பட்டுபோனார்கள். பின்னர் தாயின் இறப்பை நினைத்து கதறிய அவ்ரை மேஜர் சுந்தர்ராஜனும், குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் சேர்ந்து ஆறுதல்படுத்தியிருக்கிறார்கள்.

சில நேரங்களில் நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுக்கு காரணமே தெரியாது எனக் கூறி இந்த நிகழ்வை தனது மகன் கவுதமிடம் பகிர்ந்துகொண்டுள்ளார் மேஜர் சுந்தர்ராஜன். சிவாஜியை பற்றி யாரும் குறைகூறினால் அவர்கள் மீது கடுமையான ஆத்திரம்கொள்ளும் அளவிற்கு அவர் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்திருந்தவர் மேஜர்சுந்தர்ராஜன். அப்படி நகமும் சதையுமாக நட்போடு இருந்தவர்களையே ஒரு கட்டத்தில் அரசியல் பிரித்துவிட்டது. தமிழக முன்னேற்ற முன்னணி  என்கிற பெயரில் 1988ம் ஆண்டு தனிக் கட்சியை தொடங்கினார் சிவாஜி கணேசன்.

இந்த கட்சியில் இணைந்து தீவிரக் களப்பணியாற்றி வந்தார் மேஜர் சுந்தர்ராஜன். அப்போது அவருக்கு கொலை மிரட்டல்கள் பல வந்துள்ளன. இதைக் கண்டு மேஜர் சுந்தர்ராஜன் பயப்படவில்லை என்றாலும், அவரது மனைவி ஷியாமளா அச்சம் கொண்டுள்ளார். அரசியலைவிட்டு விலகுங்கள் என கணவனை வற்புறுத்தியிருக்கிறார். எவ்வளவோ சமாதானம் சொல்லியும் மனைவியை ஆறுதல்படுத்த முடியவில்லை. இதையடுத்து வேறுவழியின்றி தமிழக முன்னேற்ற முன்னணியிலிருந்து வெளியேறியிருக்கிறார் சுந்தர்ராஜன். ஆனால் இதனை வேறுவிதமாக சிவாஜியிடம் சிலர் திரித்துக்கூறியிருக்கின்றனர். மாற்றுகட்சியினரிடம் பணம் பெற்றுக்கொண்டுதான் தமிழக முன்னேற்ற முன்னணியிலிருந்து மேஜர் சுந்தர்ராஜன் விலகினார் என்கிற பொய் பிரச்சாரம் தமது தந்தைக்கும் சிவாஜிக்கும் இடையேயான ஆழமான நட்பில் விரிசலை ஏற்படுத்திவிட்டதாக வேதனையோடு நடிகர் கவுதம் கூறியிருக்கிறார்.

உயர்ந்த மனிதன் படத்தில் சிவாஜிகணேசனும், மேஜர் சுந்தர்ராஜனும் இணைந்து நடித்த அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே பாடல் அந்த காலம் முதல் இந்த காலம் வரை நட்புக்கு உதாரணமாக கொண்டாடப்படும் பாடல். அந்த பாடலில்  சிவாஜி, மேஜர்சுந்தர்ராஜனின் நடிப்பு மட்டுமல்ல, நிஜவாழ்க்கையில் அவர்கள் ஒருவருக்கொருவர் காட்டிய அன்பும் நட்புக்கு இலக்கணம் வகுப்பவைதான்.

 

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.