மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்த நிலையில், அவர் முதலமைச்சராக பதவியேற்றது முதல் தற்போது வரை நடைபெற்ற நிகழ்வுகளை பார்க்கலாம்.
மகாராஷ்டிராவில் 2019ம் ஆண்டு (அக்டோபர் 24ம் தேதி) நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக, சிவசேனா பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு முதலமைச்சர் பதவியை சிவசேனா கோரியதால் பாஜக-சிவசேனா இடையேயான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து திடீரென காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் மஹா விகாஸ் அகாதி என்ற மெகா கூட்டணியை சிவசேனா அமைத்தது. பலகட்ட சட்டப் போராட்டத்திற்குப் பின்னர், காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ், மற்ற சில கட்சிகள், சுயேட்சைகள் உள்ளிட்ட 169 எம்.எல்.ஏ.க்களுடன் சிவசேனா ஆட்சி அமைத்தது.
2019 நவம்பர் 28ம் தேதி சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதவியேற்றார். தொடர்ந்து மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வந்த உத்தவ் தாக்கரே, பாஜகவுடன் கூட்டணி அமைத்து 25 ஆண்டுகளை வீணடித்து விட்டதாக கூறினார்.
கடந்த 20ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற மேலவை தேர்தலில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் 12 பேர் பாஜக வேட்பாளர்களுக்கு மாற்றி வாக்கு அளித்ததால், 10-ல் 5 இடங்களை பாஜக கைப்பற்றியது.
சிக்கலுக்கு மேல் சிக்கலாக, சிவசேனா அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, அரசுக்கு எதிராக திடீரென போர்க்கொடி தூக்கினார். கவுகாத்தியில் உள்ள சொகுசு விடுதியில், சுயேட்சை மற்றும் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் என 50 பேர் தன்னுடன் இருப்பதாக ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார். ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய துணை சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்.
அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ஜூலை 11ம் தேதி வரை எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
தற்போது சிவசேனா அரசு கவிழும் நிலை ஏற்பட்டதால், உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் பிஎஸ் கோஷ்யாரி உத்தரவிட்டார். அதற்கு எதிராக சிவசேனா தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடையில்லை என தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து தனது பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார்.