மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ராஜினாமா!

மகாராஷ்ரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலேயே தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.  அரசியல் குழப்பம் மஹாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியில் சிவசேனா கட்சி தலைமையில் ஆட்சி…

மகாராஷ்ரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலேயே தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 

அரசியல் குழப்பம்

மஹாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியில் சிவசேனா கட்சி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பொறுப்பு வகித்து வருகிறார். இந்த கூட்டணி அரசு கடந்த இரண்டரை வருடமாக ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் கடந்த 20ந்தேதி சிவசேனா கட்சி எம்எல்ஏக்கள் பலர் உத்தவ் தாக்ரேவிற்கு எதிராக களமிறங்கி உள்ளனர்.

சிவசேனா கட்சியின் முக்கிய தலைவரும், அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் அணிதிரண்டு உள்ளனர். இவர்கள் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்து ஆட்சியமைக்க வலியுறுத்தி வருகின்றனர். தற்போதைய சிவசேனா ஆட்சியில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் நல்ல பலனை அனுபவித்து கட்சியை வளர்ப்பதாகவும், சிவசேனா வீழ்ச்சி அடைந்து வருவதால் இந்துத்துவா கொள்கையையுடன் ஒத்துபோகும் பாஜகவுடன் கூட்டணி வைக்கக தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ஆளுநரிடம் கோரிக்கை

இந்நிலையில் மகாராஷ்டிரா பாஜகவின் முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து, சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு அதன் பெரும்பான்மையை இழந்துவிட்டதால் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோரிக்கை வைத்தார். இதேபோல் முன்னதாக அதிருப்தி எம்எல்ஏக்கள் 7 பேரும் ஆளுநரிடம் இதே கோரிக்கையை வைத்திருந்தனர்.

உச்சநீதிமன்றம் அனுமதி

இந்நிலையில் சட்டசபையில் இன்று பெரும்பான்மையை நிரூபிக்க முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவிற்கு ஆளுநர் நேற்று அதிகாலை உத்தரவு பிறப்பித்தார். ஆளுநரின் இந்த உத்தரவை எதிர்த்து சிவசேனா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. உச்சநீதிமன்றம் ஆளுநரின் உத்தரவின் படி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அனுமதி அளித்தது.

ராஜினாமா

உச்சநீதிமன்றத்தின் உத்தரவு வெளியான சிறிது நேரத்திலேயே மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தனது ராஜினாமாவை கடிதத்தை வெளியிட்டார். சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க விரும்பவில்லை என்று ஆளுநருக்கு கடிதம் மூலம் தெரிவித்ததுடன் தனது ராஜினாமா கடிதத்தையும் அனுப்பி வைத்தார். ஆளுநரும் அவரின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டார்.

மகாராஷ்டிராவில் சிவசேனாவில் மொத்தம் உள்ள 55 எம்.எல்.ஏக்களில் 39 எம்.எல்.ஏக்கள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவிற்கு எதிராக அணி திரண்டுள்ளளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.