நெல் குவிண்டாலுக்கு ரூ. 2,500 வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்- பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,500 வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக பி ஆர்.பாண்டியன் திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில்…

நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,500 வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க
வேண்டும் என அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக பி ஆர்.பாண்டியன் திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களிடம்
கூறியதாவது: தமிழகத்தில் உரத் தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளது. தொடக்க வேளாண்
கூட்டுறவுச் சங்கங்களில் குறுவை தொகுப்புத் திட்டத்திற்கு மட்டுமே உர விநியோகம்
செய்யப்படுகிறது. விவசாயிகளின் தேவைக்கேற்ப உர விற்பனை நடைபெறவில்லை. இதனால், குருவை சாகுபடி மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் பரிதவிக்கிறார்கள். உடனடியாக கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக விவசாயிகளுக்குத் தேவையான உரங்கள் விநியோகம் செய்ய வேண்டும்.

கடந்த ஆண்டுபோல் குறுவை காப்பீடு செய்வதற்கான ஒப்பந்தங்கள் காப்பீட்டு
நிறுவனங்களோடு செய்து கொள்ளப்படவில்லை எனத் தெரியவருகிறது. இது விவசாயிகளுக்குப் பேரிடியாக உள்ளது. உடனடியாக தனி காப்பீடு திட்டத்தை தமிழக அரசே துவங்கிட முன்வரவேண்டும்.

நெல் குவிண்டால் ஒன்றுக்கு 2,500 வழங்கப்படும் என திமுக தனது சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டது. ஆனால், திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை
நிறைவேற்றாமல் இருப்பது விவசாயிகளுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.
குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,500 வழங்குவதற்கான அறிவிப்புகளை இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் வெளியிட வேண்டும் என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.