மகாராஷ்டிராவில் சட்டசபை கலைக்கப்படும் நிலைமை-சிவசேனை எம்.பி. சஞ்சய் ராவத்

மகாராஷ்டிராவில் சட்டசபை கலைக்கப்படும் நிலைமை உருவாகியுள்ளது என்று சிவசேனை கட்சியின் எம்.பி.யான சஞ்சய் ராவத் தெரிவித்தார். மகாராஷ்டிரா அமைச்சரும், சிவசேனை மூத்த தலைவருமான ஏக்நாத் ஷிண்டே ஆளும் அரசுக்கு எதிராக கடும் அதிருப்தியில் இருப்பதாகக்…

மகாராஷ்டிராவில் சட்டசபை கலைக்கப்படும் நிலைமை உருவாகியுள்ளது என்று சிவசேனை கட்சியின் எம்.பி.யான சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

மகாராஷ்டிரா அமைச்சரும், சிவசேனை மூத்த தலைவருமான ஏக்நாத் ஷிண்டே ஆளும் அரசுக்கு எதிராக கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவரை கட்சித் தலைமையால் தொடர்புகொள்ள முடியவில்லை.

அவருடன் மேலும் 5 மாநில அமைச்சர்களும், 20-க்கும் மேற்பட்ட அக்கட்சியின் எம்எல்ஏக்களும் குஜராத் மாநிலம், சூரத் நகரில் அமைந்துள்ள ஹோட்டலில் தங்கியிருந்தனர். தற்போது அஸ்ஸாமில் முகாமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இரண்டு மாநிலங்களுமே பாஜக ஆளும் மாநிலங்களாகும். ஏக்நாத் ஷிண்டே சிவசேனை கட்சியின் விசுவாசியாக இருந்தவர் ஆவார். இவர் இதுபோன்று ஆளும் அரசுக்கு எதிராக அதிருப்தி அடைந்தது சிவசேனை கட்சியினர் மத்தியில் அதிர்ச்சை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில், சிவசேனை எம்.பி. சஞ்சய் ராவத், டுவிட்டரில் மகாராஷ்டிரா சட்டசபை கலைக்கப்படுவதை நோக்கிச் சொன்று கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க இன்று மாநில அமைச்சரவையும் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையில் கூடவுள்ளது.
மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு 106 எம்எல்ஏக்கள் உள்ளனர். சிவசேனை-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு 166 எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்களில் 30க்கும் அதிகமான எம்எல்ஏக்கள் தற்போது அஸ்ஸாமில் முகாமிட்டுள்ளனர்.

இதனிடையே, உத்தவ் தாக்கரேவின் மகனான ஆதித்ய தாக்கரே, டுவிட்டரில் தன்னை பற்றி விவரக் குறிப்பு குறிப்பிடும் இடத்திலிருந்து அமைச்சர் என்பதை நீக்கிவிட்டார். அவர் மகாராஷ்டிர மாநில அமைச்சராக உள்ளார்.

முன்னதாக, அந்த மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமேலவைத் தேர்தலில் போட்டியிட்ட 5 இடங்களிலும் பாஜக வென்றது. காங்கிரஸ் வேட்பாளர் சந்திரகாந்த் ஹந்தோர் தோல்வி அடைந்தது ஆளும் கூட்டணி அரசுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

தற்போதைய அரசியல் சூழ்நிலைகளில் மகாராஷ்டிராவில் சட்டசபை கலைக்கப்படுவது அல்லது முடக்கப்படுவது என்பது நிகழலாம் என்று கூறப்படுகிறது. மகாராஷ்டிராவில் புதிய அரசு அமையும் வரை குடியரசுத் தலைவர் ஆட்சி தற்காலிகமாக அமல்படுத்தப்படலாம் என்றும் அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.