“ஜூன் 22ல் பதவியை ராஜினாமா செய்ய இருந்தார் உத்தவ் தாக்கரே”

மகாராஷ்ட்ர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கடந்த 22ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்ய இருந்ததாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. சிவ சேனா அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் கட்சித்…

மகாராஷ்ட்ர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கடந்த 22ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்ய இருந்ததாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

சிவ சேனா அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதை அடுத்து கடந்த 22ம் தேதி உத்தவ் தாக்கரே தனது தந்தையும் சிவ சேனா நிறுவனருமான பால் தாக்கரேவின் நினைவிடத்திற்கு மாலை 5.30 மணிக்கு வந்தார். பின்னர் ஃபேஸ்புக் மூலம் நேரலையில் உரை நிகழ்த்தினார்.

அப்போது, அதிருப்தியில் இருக்கும் எம்எல்ஏக்கள் மும்பைக்கு வந்து தன்னை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தால் தான் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என கூறி இருந்தார். சிவ சேனா எம்எல்ஏக்களிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளிக்கத் தயார் என்றும் அவர்கள் அதனை ஆளுநரிடம் கொடுக்கலாம் என்றும் கூறி இருந்தார்.

அதுமட்டுமின்றி, தொண்டர்கள் கேட்டுக்கொண்டல், கட்சித் தலைமையில் இருந்தும் விலகத் தயார் என்றும் உத்தவ் தாக்கரே தெரிவித்திருந்தார்.

2019ல் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடனும், காங்கிரஸ் கட்சியுடனும் கூட்டணி அமைக்கும்போது, முதலமைச்சர் பதவியை தான்தான்(உத்தவ் தாக்கரே) ஏற்க வேண்டும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்ததாகக் குறிப்பிட்ட உத்தவ் தாக்கரே, அதன் காரணமாகவே அனுபவம் இல்லாவிட்டாலும் முதலமைச்சர் பதவியை ஏற்றதாக தெரிவித்திருந்தார்.

சரத் பவாரும், சோனியா காந்தியும் தனக்கு அதிக அளவில் உதவிகளை செய்திருப்பதாகவும், அவர்கள் தன் மீது நம்பிக்கையை வைத்திருந்தார்கள் என்றும் உத்தவ் தாக்கரே குறிப்பிட்டிருந்தார்.

தனது உரை முடிந்ததும், மும்பையில் உள்ள முதலமைச்சர் இல்லமான வார்ஷா இல்லத்தை காலி செய்துவிட்டு, தனது சொந்த இல்லமான மாதோஸ்ரீ-க்கு குடும்பத்தினருடன் இடம் பெயர்ந்தார்.

இந்நிலையில், இதுதொடர்பாக தற்போது புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாஜக தலைவர்களுடன் தொடர்பில் இருக்கும் உத்தவ் தாக்கரே, நெருக்கடியில் இருந்து வெளிவர ஆலோசனை கூறுமாறு கேட்டதாகவும், பிறகு, வேறு வழி இல்லாததால், முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய கடந்த 22ம் தேதி முடிவெடுத்திருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

எனினும், கூட்டணி கட்சித் தலைவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே, பதவியை ராஜினாமா செய்யாமல் விட்டுவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 22ம் தேதி, பால் தாக்கரே நினைவிடத்திற்கு 5 மணிக்கு வர திட்டமிட்டிருந்த நிலையில் அரை மணி நேரம் தாமதமாக வந்ததன் பின்னணியில், நடந்தது இவைதான் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.