பேனரில் மீண்டும் ஓ.பி.எஸ் படம்: அதிமுக அலுவலகத்தில் நிகழ்ந்த மாற்றம்

அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்ட பேனரில் ஓபிஎஸ் புகைப்படம் கிழிக்கப்பட்ட நிலையில் அவரது படத்துடன் மீண்டும் பேனர் வைக்கப்பட்டுள்ளது.  ஒற்றைத் தலைமையா, இரட்டை தலைமையா என்கிற சர்ச்சை அதிமுகவில் கடந்த சில வாரங்களாக பெரும்…

அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்ட பேனரில் ஓபிஎஸ் புகைப்படம் கிழிக்கப்பட்ட நிலையில் அவரது படத்துடன் மீண்டும் பேனர் வைக்கப்பட்டுள்ளது. 

ஒற்றைத் தலைமையா, இரட்டை தலைமையா என்கிற சர்ச்சை அதிமுகவில் கடந்த சில வாரங்களாக பெரும் புயலை கிளப்பியுள்ளது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கிடையேயான மனக்கசப்பு விஸ்வரூபம் எடுத்துள்ளது.

கடந்த 23ந்தேதி நடைபெற்ற பொதுக் குழுவில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இந்நிலையில் இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் உள்ள ஓபிஎஸ் படம் கிழிக்கப்பட்டது. அதிமுக தலைமை
அலுவலகத்தில் இன்று காலை தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் அதிமுக மகளிர் அணி சார்பில் தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் புகைப்படத்துடன் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த பேனரில், ஓபிஎஸ் படம் மட்டும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர் ஒருவரால் கிழிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து தற்போது அதே இடத்தில் மீண்டும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் புகைப்படத்துடன் கூடிய புதிய பேனர் வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.