U19 மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் – இந்தியா அபார வெற்றி

U19 மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், ஐக்கிய அரபு அமீரகம் அணிக்கு எதிரான போட்டியில் 122 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. மகளிருக்கான U19 உலகக் கோப்பை…

U19 மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், ஐக்கிய அரபு அமீரகம் அணிக்கு எதிரான போட்டியில் 122 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

மகளிருக்கான U19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி, ஐக்கிய அரபு அமீரக மகளிர் அணியை எதிர்கொண்டது.

டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் சஃபாலி வர்மா 34 பந்துகளில் 78 ரன்களும், ஸ்வேதா சர்வாத் 49 பந்துகளில் 74 ரன்களும் விளாசினர்.

இதையடுத்து 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரக அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு வெறும் 97 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 122 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது.

ஏற்கனவே கடந்த ஜனவரி 14ஆம் தேதி நடைபெற்ற, தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இன்றைய போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று, குரூப் D பிரிவில் முதலிடத்தில் உள்ளது. இந்திய மகளிர் அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடிய சஃபாலி வர்மாவும், ரிச்சா கோஷும், U19 இந்திய மகளிர் அணியிலும் இடம்பெற்றுள்ளது பலமாக கருதப்படும் நிலையில், தென்னாப்பிரிக்க மண்ணில் இந்தியாவின் ஆதிக்கம் தொடர்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.