விடாமுயற்சி, பெண் சுயமரியாதை பேசிய ‘சூரரைப் போற்று’

சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் பல பின்னடைவுகளுக்கு பிறகு திருப்பு முனையாக அமைந்த திரைப்படம் ‘சூரரைப்போற்று’. படம் வெளியாகி 2 ஆண்டுகள் முடிந்திருந்தாலும் அது ஏற்படுத்திய நெகிழ்வு இன்னும் நம் மனங்களை விட்டு விடுபடவில்லை. 2டி…

சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் பல பின்னடைவுகளுக்கு பிறகு திருப்பு முனையாக அமைந்த திரைப்படம் ‘சூரரைப்போற்று’. படம் வெளியாகி 2 ஆண்டுகள் முடிந்திருந்தாலும் அது ஏற்படுத்திய நெகிழ்வு இன்னும் நம் மனங்களை விட்டு விடுபடவில்லை. 2டி நிறுவனம் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் 2020ஆம் ஆண்டு வெளிவந்த படம்தான் சூரரைப் போற்று.

பணக்காரர்கள் மட்டும் பறக்கும் விமானம், எளிய மக்களுக்கும் சிறகை விரிக்க வேண்டும் என்ற ஆவலுடன் கிராமத்திலிருந்து தன் கனவுகளை சுமந்து செல்லும் இளைஞனின் கதைதான் சூரரைப் போற்று. எளிய இளைஞரின் கனவை அவ்வளவு நேர்த்தியாக இத்திரைப்படம் சொல்லி இருந்தது. நெடுமாறன் ராஜாங்கம் கதாபாத்திரத்தில், ஆக்ரோஷமான இளைஞனாகவும், கனவின் மீது தீராக் காதல் கொண்டவராகவும் நடிகர் சூர்யா நடிப்பில் இன்னொரு பரிமாணத்தை எட்டியிருந்தார்.தன் தந்தை இறக்கும் தறுவாயில் இருக்கும்போது விமானத்திற்கு காசில்லாமல் தவிக்கும் காட்சியில் நடிப்பின் உச்சத்தை வெளிப்படுத்தி இருந்தார் சூர்யா என்றே சொல்லலாம்.

சூர்யாவுக்கு இணையாக நடித்திருந்த அபர்ணா பாலமுரளிக்கு அவரைப் போலவே அழுத்தமான கதாபாத்திரம். விமானம் விட துடிக்கும் நெடுமாறன் ராஜாங்கம் போலவே, தன்னுடைய பேக்கரி கனவை சாத்தியப்படுத்த துடிக்கும் பொம்மியும் அனைவரின் மனதையும் நிறைத்திருந்தார்.

தமிழ் சினிமா பெரும்பாலும் ஆண்களின் பார்வையில் இருந்து மட்டும்தான் அணுகப்பட்டிருந்தது. அதற்கு காரணம் இங்கு பெண் இயக்குநர்கள் வெகுசிலரே. அதனால், பெண்களின் கதாபாத்திரமும் ஆண்களின் எண்ணத்தில் தோன்றியவையாகவே இருக்கும். ஆனால், சுதா கொங்கரா பெண்ணின் பார்வையிலிருந்து பொம்மி கதாபாத்திரத்தை உருவாக்கி இருந்தார். கணவர் உள்பட யாரிடமும், எந்த இடத்திலும் தன்னுடைய சுயமரியாதையை எந்த இடத்திலும், விட்டுக்கொடுக்காமல் படம் முழுக்கவே பயணிப்பார் பொம்மி. அது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது.

சாதிக்கத் துடிக்கும் இளைஞனுக்கு உதவும் கிராம மக்கள், மகன் மீது கோபம் காட்டும் தந்தை அதே மகனிடம் பேச துடிப்பது, பேச முடியாமலேயே மரணிப்பது, நண்பர்களின் மீதான அளப்பறிய நம்பிக்கை, தனது தங்கை திருமணத்திற்கு வைத்திருக்கும் பணத்தை கொடுத்தும் உதவும் நண்பன் காளி வெங்கட், தனது பெரும் சேமிப்பை கொடுத்து உதவும் சின்ன மாமனார் கருணாஸ் என பல கதாபாத்திரங்கள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தன. சூர்யாவின் அம்மாவாக வந்த ஊர்வசி கோபம், அழுகை என அனைத்து வடிவங்களிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
இதற்கு எல்லாம் ஈடு செய்யும் வகையில் ஜி.வி.பிரகாஷ் இசை படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்த்தது, அத்தோடு கொரோனா காலகட்டத்தில் ஓடிடி -யில் வெளியாகி பலதரப்பட்ட மக்களின் கவனத்தை ஈர்த்து வெற்றி வாகை சூடியது.

ஒருவரின் வாழ்க்கை கதையை இப்படி சொல்ல முடியுமா என்ற அளவிற்கு எதார்த்தமாக சொல்லி இருந்தார் இயக்குநர் சுதா. எந்த பின்புலமும் இல்லாமல் வாழ்க்கையில் சாதிக்க துடிக்கும் பல இளைஞர்களுக்கு இத்திரைப்படம் ஒரு பெருங்கனவின் துவக்கமாக அமைந்தது.சுயமரியாதை திருமணம், சாதி ஒழிப்பு குறித்த பாடல், பெண் சுயமரியாதை என பல விஷயங்களை திரைப்படம் பேசியிருந்தது.

“நான் இல்லாம போனாலும் சரி

நீங்க என்னத்த பண்ணுனாலும் சரி
ஏர் ஓட்டுறவனும் ஏரோ பிளேன்-ல போயாச்சு
இனியும் போவாய்ங்க

ஏய் வானம் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா” 

– என்ற வசனங்கள் உணர்ச்சி பொங்க வைத்ததை யாரால் மறுக்க முடியும்.

“நாம ஜெயிச்சிட்டோம் மாறா” என்று படத்தின் கடைசியில் வரும் வசனம் நம்பிக்கையின் ஒளிக்கீற்று. இந்த வசனம் போலவே சூரரை போற்று திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி பெற்று சிறந்த நடிகர், நடிகை, திரைக்கதை, பின்னணி இசை, சிறந்த படம் என 5 பிரிவுகளில் தேசிய விருதுகளை பெற்றுத் தந்து மாறனை இன்னும் ஒருமுறை ஜெயிக்க வைத்துள்ளது.

காயத்ரி வேல்முருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.