தமிழ்நாட்டில் இருவேறு இடங்களில் முறையற்ற உறவால் பெண்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம், சித்தோடு பேரூராட்சிக்கு அருகே உள்ள கொங்கர்பாளையம் அமராவதி நகரை சேர்ந்தவர் ரேவதி. 26 வயதாகும், இவர் ஒரு இல்லத்தரசி. இவர் கருப்பண் என்பவரை திருமணம் செய்துகொண்டார். சரக்கு ஆட்டோ ஓடுநராக இருக்கும் கருப்பணின் நண்பர்தான் மாதேஸ்வரன். இவர் அடிக்கடி கருப்பணின் வீட்டுக்கு வந்ததாகவும், அப்போது ரேவதியுடன் நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் கருப்பணுக்கு தெரியவந்ததும், அவர் ரேவதியை கண்டித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் ரேவதி அவருடன் ஏற்பட்ட உறவை முறித்துகொள்ள தயாராக இல்லை என்பதால், கருப்பண் ரேவதியை சரமாரியாக வெட்டியுள்ளார். ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து ரேவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து ரேவதியின் உடலை மீட்டு உடல் கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து இந்த கொடூரக் கொலையை செய்த கருப்பணை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுபோலவே வேறொரு சம்பவமும் நெல்லையில் நடந்துள்ளது. நெல்லை மாவட்டம், மூலைக்கரைப்பட்டியை சேர்ந்தவர் ராஜலட்சுமி. 45 வயதாகும் இவர் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவரின் கணவர் பெயர் வேலாயுதம். இவருக்கு 55 வயதாகிறது. ராஜலட்சுமிக்கும், அதே தெருவைச் சேர்ந்த அன்பழகனும் கடந்த ஒரு வருடமாக நெருக்கமாக பழகி வருவதாக, அக்கம்பக்கத்தினர் தெரிவித்து உள்ளனர். மேலும் ராஜலட்சிமியின் கணவர் வேலாயுதமும் இதே கருத்தைதான் காவல்துறையினர் விசாரணையில் தெரிவித்துள்ளார். ராஜலட்சுமிக்கு, 23 வயதில் அனிதா என்ற மகள் இருக்கிறார். அவரை அருகில் இருக்கும் ஊரைச்சேர்ந்த அபிமன்யூ என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

அபிமன்யூ தொடர்ந்து குடிபோதையில் சண்டையிடுவதால், அனிதா தனது இரு பெண் குழந்தைகளுடன் அம்மா ராஜலட்சுமி வீட்டுக்கே வந்து தங்கி உள்ளார். அவ்வப்போது தனது குழந்தைகளைப் பார்க்க அபிமன்யூ மட்டும் ராஜலட்சுமியின் வீட்டுக்கு வந்து செல்வார். இந்நிலையில் நேற்று இரவு அவர் குழந்தைகளை பார்க்க வந்ததாக கூறப்படுகிறது. அப்போது ராஜலட்சுமியும் அன்பழகனும் நெருக்கமாக இருந்தை அவர் பார்த்தாகவும், இதனால் ஆத்திரமடைந்த அபிமன்யூ தூங்கிக்கொண்டிருந்த மாமனார் வேலாயுதத்தை எழுப்பி, இருவரும் இணைந்து சரமாரியாக ராஜலட்சுமியையும், அன்பழகனையும் வெட்டியுள்ளனர். சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் ராஜலட்சுமி துடிதுடித்து உயிரிழந்தார். அன்பழகன் நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த கொடூரச் செயலை அரங்கேற்றிய மருமகன் அபிமன்யூவும், மாமனார் வேலாயுதமும் மூலைக்கரைப்பட்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.







