உதகை மாவட்டம் மசினகுடி செல்லும் கல்லட்டி மலைப்பாதையில் மேகமூட்டத்துடன் கூடிய மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.
தமிழ்நாட்டின் ஒரு சில மாவட்டங்களில் இன்று முதல் 7 நாட்களுக்கு கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை முதல் வெயிலின் தாக்கம் குறைந்து லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இதனையடுத்து மாலை முதல் உதகை சுற்றுவட்டாரப் பகுதிகளான தலைக்குந்தா, கல்லட்டி, ஏக்குணி உள்ளிட்ட பகுதிகளில் மேகமூட்டத்துடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது.
அதேபோல் உதகையிலிருந்து மசினகுடி செல்லும் கல்லட்டி மலை பாதையில் மலை முகடுகளை முற்றிலும் அடர்ந்த மேகமூட்டங்கள் சூழ்ந்து காணப்பட்டு மிதமான மழை பெய்து வருகிறது. அப்போது மசினகுடி வழியாக உதகை நோக்கி சென்ற வாகனங்கள் கல்லட்டி மலைப்பாதையில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்கி செல்கின்றனர்.
ரூபி.காமராஜ்







